துப்பாக்கிச்சூட்டால் அதிர்கின்றது தெற்கு; இரு நாட்களில் 5 பேர் சுட்டுப் படுகொலை!
இலங்கையில் கடந்த இரண்டு நாட்களில் நடத்தப்பட்ட நான்கு துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களில் 5 பேர் பலியானதுடன் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
இதனடிப்படையில் நான்காவது துப்பாக்கிச்சூடு நேற்றிரவு இரத்மலானை –சில்வா மாவத்தைப் பகுதியில் நடத்தப்பட்டது.
ஆயுதங்களுடன் வீட்டுக்குள் நுழைந்த இருவர் ஓட்டோ சாரதி மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
சம்பவத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 30 வயதான நபரே உயிரிழந்தார்.
எதற்காக இவ்வாறு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என்பது தொடர்பில் இதுவரையில் தகவல் வெளியாகவில்லை.
இதேவேளை, அம்பலாங்கொடை – கலகொட பகுதியில் நேற்று மாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலியாகினர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கானவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு மற்றுமொருவர் பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதேவேளை, அம்பலாங்கொட – ஊரவத்த பகுதியில் நேற்றுமுன்தினம் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பாதாள உலகக் குழு உறுப்பினர் ஒருவர் உயிரிழந்தார்.
குறித்த நபர் பலப்பிட்டிய மேல்நீதிமன்றில் வழக்கொன்றுக்காக முன்னிலையாகி மீள வீடு திரும்பிய சந்தர்ப்பத்தில் இவ்வாறு கொல்லப்பட்டார்.
இந்தநிலையில் குறித்த துப்பாக்கிச்சூட்டுக்கும் நேற்றைய துப்பாக்கி சூட்டுக்கும் தொடர்பு உள்ளதா? என்ற அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, கம்பஹா நீதிமன்றுக்கு முன்பாக நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினரான ‘பஸ் பொட்டா’ எனப்படும் சமன் ரோஹித பெரேரா உயிரிழந்தார்.
கம்பஹா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அவர் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார் என்று வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கம்பஹா நீதிமன்றுக்கு முன்பாக நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பாதாள உலகக் குழுவின் உறுப்பினரான ‘பஸ் பொட்டா’ என்ற சமன் ரோஹித பெரேரா உள்ளிட்ட நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.
குறித்த நால்வரும் நேற்று மதியம் கொலைச் சம்பவம் ஒன்று தொடர்பில் நீதிமன்றில் முன்னிலையாகி கப் ரக வாகனம் ஒன்றில் திரும்பிச் செல்ல முற்பட்டபோது இவ்வாறு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.