Rashtrapatni: குடியரசுத் தலைவர் குறித்து அவதூறு… சோனியா- ஸ்மிருதி இரானி இடையே காரசார பேச்சு
நாடாளுமன்றத்தில் இன்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு குறித்து காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி அவதூறாக பேசியதையடுத்து சோனியா காந்தி மற்றும் ஸ்மிருதி இரானி கடுமையாக பேசிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. கூட்டத் தொடர் தொடங்கிய நாள் முதலே எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேச அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து கூச்சல், எம்.பி.க்கள் சஸ்பெண்ட், தர்ணா என இந்த மழைக்கால கூட்டத் தொடர் பரபரப்பாக சென்று வருகிறது.
இந்நிலையில், இன்றைய நாளின்போது மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, ராஷ்டிரபத்னி என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை அழைத்தார். தான் தவறுதலாக கூறிவிட்டதாக அவர் தெரிவித்தார். எனினும், அதனை ஏற்க மறுத்து பாஜக எம்பிக்கள் கண்டனம் தெரிவித்தனர்.
அப்போது, என்ன் நடந்தது என்பதை அறிவதற்காக காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, பாஜக மூத்த தலைவர் ரமா தேவியிடம் சென்றார். அப்போது பாஜகவின் ஸ்மிருதி இரானி அவரை இடைமறித்துள்ளார். ‘நீங்கள் என்னிடம் பேச வேண்டாம்’ என சோனியா காந்தி ஸ்மிருதி இரானியிடம் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே பேச்சு மோதல் ஏற்பட்டது. ஆளுங்கட்சி எம்பிக்களை சோனியா காந்தி மிரட்டியதாக பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோனியா காந்தியும், ஆதிர் ரஞ்சன் சௌத்ரியும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவையில் ஸ்மிருதி இரானி வலியுறுத்தி பேசினார். குடியரசுத் தலைவர் குறித்து ராஷ்டிரபத்னி என குறிப்பிடும்படி ஆதிர் ரஞ்சன் சௌத்ரியிடம் சோனியா காந்திதான் கூறியதாகவும் ஸ்மிருதி இரானி குற்றஞ்சாட்டினார்.
ஆதிர் ரஞ்சன் சௌத்ரியும் காங்கிரஸ் கட்சியும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி பாஜக எம்.பி.க்கள் இன்று நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தினர். ஆதிர் ரஞ்சன் சௌத்ரி பேசியதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்த சோனியா காந்தி, ‘அவர் ஏற்கெனவே மன்னிப்பு கேட்டுவிட்டார்’ என்று தெரிவித்தார்.