அகத்தைக் காக்கும் அகத்திக்கீரை.
உணவே மருந்து என வாழ்ந்த நம் முன்னோர் கண்டறிந்த அற்புத காயகல்ப மூலிகைகளில் கீரைகள் தனித்துவமானவை. உணவாகவும் மருந்தாகவும் பயன்படும் அமிர்தங்கள் கீரைகள். அந்தக் கீரைகளில் சிறப்பானது அகத்திக்கீரை.
அகத்தி என்ற சொல்லுக்கு முதன்மை என்று பொருள். இது, அகத்தில் அதாவது நம் உள்ளுறுப்புகளில் மிகச் சிறப்பாகச் செயல்படக்கூடியது. குறிப்பாக வாய், உணவுக்குழாய், வயிறு, குடல் இவற்றிலுள்ள தீயை (வெப்பத்தை) நீக்குவதால் அகத்தி என்று அழைக்கப்படுகிறது. இது மரம் போல உயரமாக வளர்ந்தாலும் செடி வகையைச் சார்ந்ததுதான். அகத்தியில் வெள்ளை நிறப் பூவையுடையது அகத்தி என்றும், செந்நிறப் பூவையுடையது செவ்வகத்தி என்றும் அழைக்கப்படுகிறது. இதன் சுவை சிறு கசப்புச் சுவையுடன் குளிர்ச்சித்தன்மை கொண்டது. பிறரை வசப்படுத்தும் நோக்கில் தெரியாமல் கொடுக்கப்படும் இடுமருந்தை இது முறிக்கும் என்பது இதன் சிறப்பம்சங்களில் ஒன்று.
நூறு கிராம் அகத்திக் கீரையில் வைட்டமின் ஏ-200 மிகி, வைட்டமின் சி-300 மிகி, தயமின்-60 மி.கி., ரிபோப்ளேவின்-56 மி.கி., இரும்புச்சத்து-235 மி.கி., கால்சியம்-1800 மி.கி., துத்தநாகம்-135 மி.கி. உள்ளது. இக்கீரையில் நீர்ச்சத்து-78 சதவீதம், மாவுச்சத்து -11 சதவீதம், புரதம் -8.9 சதவீதம், நார்ச்சத்து -13 சதவீதமும் மற்றும் 800 கலோரி ஆற்றலும் உள்ளது. அகத்திக்கீரையின் பொதுவான குணத்தைப் பற்றி அகத்தியர் தன்னுடைய குணப் பாட நூலில் இவ்வாறு கூறுகிறார்;
மருந்திடுதல் போகுங்காண் வன்கிரந்தி வாய்வாம்திருந்த அசனம் செரிக்கும்-வருந்தச்சகத்திலெழு பித்தமது சாந்தியாம் நாளும் அகத்தியிலை தின்னு மவர்க்கு
அகத்திக்கீரையின் இலை, பூ இரண்டுமே உணவாகப் பயன்படுகிறது. சில வெப்ப வீரியமுள்ள சித்த மருந்துகளை உண்ணும்போது அகத்திக்கீரை எடுக்கக்கூடாது. ஏனெனில், இது மருந்துகளின் செய்கை வீரியத்தை, குறைக்கும். உடல் வெப்பத்தைக் குறைத்து, பசியின்மையை நீக்கி, உணவை நன்றாகச் ஜீரணிக்கச் செய்யும்.அகத்திக்கீரையுடன், சின்ன வெங்காயம், சீரகம், மிளகு சேர்த்து பொரியலாகச் சாப்பிட்டுவர வயிற்று வலி, வயிற்றுப் புண்கள், தேவையில்லாத வயிற்று புழுக்கள் நீங்கும்.
காய்ச்சல் நேரங்களில் இதன் இலையைக் கீரையாகச் சாப்பிட்டுவர உடல் வெப்பம் தணியும். இதை அரைத்துத் தலையில் பூசிவர தலை வெப்பம், வெறி, மயக்கம் நீங்கும்.அகத்திப் பூவைப் பொரியலாகச் சமைத்து உண்ண, வெயிலால் ஏற்படும் உடற்சூடு தணியும். மேலும், புகையிலை, பீடி, சிகரெட் இவற்றால் உடலில் தோன்றும் வெப்பம், உட்சூடு, பின் விளைவுகளை நீக்கி, புகைப்பிடிப்பதில் உண்டாகும் ஆர்வத்தையும் குறைக்கும், இதை அகத்தியர் தன்னுடைய குணவாகட நூலில் இவ்வாறு கூறுகிறார்;
புகைப்பித்த மும்மழலாற் பூரிக்கும் அந்த
வகைப்பித்த மும்மனலும் மாறும்-பகுத்த
சகத்தி லருந்தாத் தனியமிர்தே! நாளும்
அகத்தி மலருக் கறி என்கிறார்.
மூக்கின் வழியாக ஒரு சிலருக்கு அடிக்கடி வழியும் ரத்தப் பெருக்கை விரைவாக நிறுத்துவதற்கு செவ்வகத்தி பூவின் சாற்றை ஒன்று முதல் இரண்டு துளி வீதம் மூக்கில் விட்டுவர ரத்தம் வடிவது நிற்கும். இதை அகத்தியர் தன்னுடைய குணவாகட நூலில்;
பாடிப் பனிப்பீனும் நாசிக் கறைக்கதழ்வை
யோடித் துடைத்துள் ளொளியாற்றும்-பாடத்
தவரகத்தி னுந்துணங்கைத் தண்டா மயிலே
துவரகத்திப் பூக்காண் டுதிஎன்கிறார்.
அகத்திக் கீரையை, சிறிதாக பொடித்த அரிசியுடன், கஞ்சியாக காய்த்துக் குடித்துவந்தால் உடல் வெப்பம், உட்சூடு நீங்கி ராஜ உறுப்புகளான இருதயம், மூளை, நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் பலப்படும்.அகத்திக் கீரை, சின்ன வெங்காயம், சிறிதளவு பூண்டு, மிளகு, சீரகம் ஆகியவற்றைச் சேர்த்துப் பொரியலாகச் சாப்பிட்டுவந்தால் உள்ளங்கை, உள்ளங்கால் எரிச்சல், உடல் எரிச்சல் , உட்சூடு நீங்கும்.
அகத்திக் கீரையை பாசிப்பருப்புடன் சேர்த்து கொதிக்கவைத்து இரண்டு சொட்டு விளக்கெண்ணெய் விட்டு, கூட்டாக வைத்துச் சாப்பிட்டுவர, உடல் வெப்பம், குடல் புண், மலச்சிக்கல், மூலச்சூடு ஆகியன நீங்கும்.அகத்திக்கீரையில் ரிபோஃப்ளேவின் இருப்பதால் வாய்ப்புண், நாக்குப்புண், குடல் புண் நீங்கி வாய் நாற்றமும் போகும்.அகத்திக் கீரையை நிழலில் காயவைத்து பொடியாக்கி தினமும் ஒரு கிராம் வீதம் ஏதேனும் ஒரு வேளை பாலில் அல்லது தேனில் கலந்து சாப்பிட்டுவர வயிற்று அமிலச்சுரப்பால் ஏற்படும் மார்பு வலி, நெஞ்செரிச்சல் ஆகியன குணமாகும்.