தகதக மேனிக்கு தாமரை எண்ணெய்!
சருமப் பாதுகாப்புக்கு ரசாயனக் கலப்பு இல்லாத இயற்கை பொருட்களே நல்லவை. அப்போதுதான் சருமம் பாதிப்பு அடையாமல் இருக்கும்.அந்த வகையில் தாவரங்களில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்கள் மிகவும் சிறந்தன. அவற்றில் தாமரை எண்ணெய் தனித்துவமானது. இந்த எண்ணெய் தாமரையின் மலரை மட்டுமின்றி அதன் விதைகளையும் பயன்படுத்தித் தயாரிக்கப்படுகிறது.
தாமரை எண்ணெயில் வைட்டமின்கள் ஏ, பி மற்றும் சி உள்ளது. அதனோடு பல்வேறு தாதுஉப்புக்களும் உள்ளன. தாமரை எண்ணெயில் உள்ள ஒலிகோசாக்கரைடு, சரும செல்களின் வளர்ச்சியைத் தூண்டும் தன்மைகொண்டது. தோற்றப் பொலிவுக்கு அவசியமான கொலாஜன்கள் மற்றும்எலாஸ்டின்களின் செயல்பாட்டை மேம்படுத்த உதவும். சைட்டோகைன் உற்பத்தியை மேம்படுத்துகிறது. இதனால், செல்கள் புத்துயிர் பெறுகின்றன.
தாமரைப் பூவை நேரடியாகப் பயன்படுத்துவதைவிட, எண்ணெயாகப் பயன்படுத்தும்போது, அது சருமத்துக்குள் எளிதில் ஊடுருவி அதனைப் பாதுகாக்கிறது.தாமரை எண்ணெய்யைத் தொடர்ந்து உபயோகித்துவர சருமத்தின் நிறத்தை மேம்படுத்த உதவும். முகப்பரு, தழும்புகள், கரும்புள்ளிகளை நீக்கி, சருமத்தைப் பொலிவாக்கும். மேலும், இந்த எண்ணெயை முகத்துக்கு மட்டுமின்றி கை கால்களுக்கும் பூசிக்கொள்ளலாம். இது தோலின் மேல் படியும் இறந்த செல்களை அகற்றி, சருமத்தை வறட்சியில் இருந்து பாதுகாத்து, தோலுக்குத் தேவையான ஈரப்பதத்தை மீட்டுத் தருகிறது.
தாமரை எண்ணெயில் உள்ள மூலக்கூறுகள், ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். இதனால், தோலில் ஏற்படும் சுருக்கங்கள், கோடுகள் ஆகியவை குறையும். மேலும், தாமரை எண்ணெய் தலைமுடி உதிர்வைத் தடுத்து வளர்ச்சியை அதிகரிக்கும்.