ஆர்ப்பாட்டத்தை வைத்து இனக் கலவரத்தை உருவாக்க முயன்ற படை வீரரின் பொய் அம்பலம்!
ஓய்வு முடிந்து முகாமுக்கு திரும்பிக் கொண்டிருந்த போது வேன் ஒன்றின் மூலம் இனந் தெரியாதோரால் கடத்தப்பட்டதாக கூறி நாட்டில் இன கலவரம் ஒன்றை உருவாக்கும் நோக்கோடு செயல்பட்ட விமானப்படை கோப்ரல் ஒருவரை வாழைச்சேனை பொலிஸார் நேற்று (28) கைது செய்தனர்.
மரத்தில் தானே கைகால்களை கட்டிக் கொண்டு, தன்னை கொலை செய்ய சிலர் முயன்றதாக நடித்த நாடகம் அம்பலத்துக்கு வந்துள்ளது.
நிக்கவத்தை, மாணில்வல, வலபனையில் வசிக்கும் 33 வயதான எம்.ஒய்.ஜி.ஆர்.எம். நதீக பத்மலால் ரத்னசூரிய என்ற நபரே கைதாகியுள்ளார்.
இவர் மட்டக்களப்பு விமானப்படை தளத்தில் கடமையாற்றும் கோப்ரல் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
மேற்கண்ட விமானப்படை கோப்ரல் நேற்று (28) காலை வாழைச்சேனை ரிதீதென்ன பிரதேசத்தில் மரத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த நிலையில் பிரதேசவாசிகள் இவரைக் கண்டுள்ளனர்.
அவர்கள் வாழைச்சேனை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து , வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரின் அருகில் தமிழில் எழுதப்பட்ட பதாகை ஒன்று காணக் கூடியதாக இருந்தது.
அந்த பதாகையில் முரட்டு அரசியலுக்கு உதவும் கைக்கூலிகள் இப்படித்தான் கொலை செய்யப்படுகிறார்கள் என தமிழில் எழுதப்பட்டிருந்தது. තක්කඩි දේශපාලනයට උදව් කරන පාදඩයන් මරා දමන්නේ මෙලෙසය எனும் சிங்கள வார்த்தைகளே தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு முரட்டு அரசியலுக்கு உதவும் கைக்கூலிகள் இப்படித்தான் கொலை செய்யப்படுகிறார்கள் என எழுதப்பட்டுள்ளது. முரட்டு அரசியலுக்கு என்பது மோசமான ஆட்சி என வந்திருக்க வேண்டும். அதாவது
மோசமான ஆட்சிக்கு உதவும் கைக்கூலிகள் இப்படித்தான் கொலை செய்யப்படுவார்கள் என வந்திருக்க வேண்டும்.
இதற்கிடையில், படை வீரர்கள் மீது அரகலய போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தத் தொடங்கியதாக, இந்தச் சம்பவத்தை சமூக வலைதளங்களில் பரப்பும் நடவடிக்கையை அரசு ஆதரவாளர்கள் தொடங்கினர்.
விடுமுறை முடித்து மஹியங்கனை ஊடாக மானம்பிட்டி மட்டக்களப்பு சந்தியை வந்தடைந்த தன்னை நேற்று முதல்நாள் (27) இரவு 07.00 மணியளவில் வேனில் கடத்திச் சென்று தாக்கி, கட்டி வைத்து, கழுத்தில் கயிறு ஒன்றில் தூக்கலிட முயன்று , இந்த பதாகையை தொங்கவிட்டு குற்றவாளிகள் தப்பிச் சென்றதாக இந்த நபர் தெரிவித்திருந்தார்.
தன்னிடமிருந்த இரண்டரை இலட்சம் ரூபாவையும் கடத்தியவர்கள் அபகரித்துச் சென்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த பணத்தை தன்னிடமிருந்த நகையை அடகு வைத்து பெற்றதாகக் கூறியுள்ளார். இவ்வளவு பணம் எதற்கு எனக் கேட்டபோது பண நெருக்கடி காரணமாக முகாமில் உள்ள நண்பர்களிடம் கடனை அடைக்க இந்த பணத்தை பெற்றுக் கொண்டதாக கூறினார்.
படையினர் மீது அழுத்தங்களை செலுத்தும் முகமாகத் தோன்றிய இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்கள் மூலம் பெரும் பரப்புரையைப் பெற்றுவரும் வேளையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவரிடம் பொலிஸார் வாக்குமூலங்களைப் பதிவு செய்ய ஆரம்பித்தனர்.
சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் முதலில் அவருக்கு அருகில் கிடைத்த போர்டில் எழுதப்பட்டுள்ள தமிழ் வாக்கியம் குறித்து விசாரித்தனர்.
அந்த வாக்கியத்தை ஆய்வாளர்கள் அவதானித்த போது, அது தமிழ் மொழியில் அனுபவம் இல்லாத ஒருவரால் எழுதப்பட்டது என்பதை முதலில் உணர்ந்தனர்.
பின்னர், அவர் வரும் வழியில் மஹியங்கனையில் பேருந்தில் இருந்து இறங்கிய இடத்தைச் சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, பேருந்தில் இருந்து இறங்கி கடையொன்றுக்கு சென்ற அவர், அட்டைப் பலகை மற்றும் கயிறு ஒன்றை வாங்கிய விதத்தை ஆய்வாளர்கள் அவதானித்துள்ளனர்.
இவர் கடத்தப்பட்டதாக கூறப்படும் மணம்பிட்டி மட்டக்களப்பு சந்திக்கு அருகில் எரிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றும் உள்ளது.
இரவு 7 மணிக்கு மேல் கூட்டம் அஙஇகே அலைமோதுகிறது. குடியிருப்புகளிலோ, அருகில் உள்ள ராணுவச் சாவடியிலோ ரகசியமாக பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளில் அவர் குறிப்பிட்ட வகையிலான எந்த வாகனத்தையும் போலீசார் பார்க்கவில்லை.
இதற்கிடையில், புலனாய்வாளர்கள் அந்த நபரின் வீட்டிற்கு தொலைபேசியில் அழைத்து, வீட்டில் உள்ள நிதி சிக்கல்கள் குறித்து விசாரித்துள்ளனர். அவரது மனைவி, அந்த அளவுக்கு கடுமையான நிதிப் பிரச்னை எதுவும் இல்லை என்று கூறியுள்ளார்.
இந்த தகவல்களை எல்லாம் திரட்டிய புலனாய்வுக் குழுவினர் அவரிடம் , இனிமேல் பொய் சொல்லி பிரயோஜனம் இல்லை என்றும், இப்போது புலனாய்வாளர்களுக்கு எல்லாம் தெரியும் என்றும் அவருக்கு தெரிவித்ததோடு, எனவே மேலும் சிக்கலில் மாட்டிக்கொள்ளாமல் உண்மையைச் சொல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
அப்போது விமானப்படை வீரர்கள் ஆன்லைன் கேமுக்கு பெரிதும் அடிமையாகி இருப்பது தெரியவந்துள்ளது.
நகையை அடகு வைத்து சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்ள நினைத்ததாகவும், தற்கொலை செய்து கொண்டால் மனைவிக்கு கிடைக்கும் உதவி தொகைகள் கிடைக்காததால் இப்படி அனைத்தையும் திட்டமிட்டு செய்ததாகவும் கூறியுள்ளார்.
வாழைச்சேனை ரிதீதன்ன பிரதேசத்திற்கு தற்கொலை செய்து கொள்வதற்காக வந்த போது எதற்காக தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என நினைத்து இரவு முழுதும் தவித்ததாகவும், மனைவியின் நினைவுகளால் தற்கொலை செய்யும் முடிவை முற்றாக மாற்றிக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.