செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் ஒலித்த கமல் குரல்.. பார்வையாளர்களை பரவசப்படுத்திய வர்ண ஜாலங்கள்
செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழாவில் கமல்ஹாசன் குரலில் ஒலித்த தமிழர்களின் வரலாற்றைச் சொன்ன கலைநிகழ்ச்சி பார்வையாளர்கள் அனைவரையும் கவர்ந்தது. சங்க காலம் முதல் சம காலம் வரையிலான தமிழர்களின் வரலாறு காட்சிப்படுத்தப்பட்டது.
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி எனத் தொடங்கியது கமல்ஹாசனின் குரலில் ஒலித்த தமிழர் வரலாறு. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாகரிகத்தில் செழித்து விளங்கிய தமிழர்களின் வரலாறு கமல்ஹாசனின் குரலுக்கு ஏற்ப காட்சிகளாக விரிந்தது. சோழ, சேர, பாண்டியர் என மூவேந்தர்கள் பற்றி கமல் விவரிக்க, அம்மன்னர்களின் சின்னங்கள் கொண்ட கொடிகளை அசைத்தபடி கலைஞர்கள் ஆடி அசத்தினர்.
ராஜேந்திர சோழனின் கடல் பயணங்கள், பண்டைத் தமிழரின் கடல் கடந்த வணிகம், காலத்தால் அழியாத கல்லணை என அடுக்கடுக்காக தமிழரின் வரலாறு ஒலிக்க, அதற்கேற்ப மேடையில் மலர்ந்த காட்சிகள் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தின. சிலம்பாட்டம், ஏறு தழுவுதல், பரத நாட்டியம், நாட்டுப்புறக் கலைகள் என வீர விளையாட்டுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் குறித்து கமல் தன் குரலில் விவரிக்க, அதற்கேற்ப நிகழ்ந்த ஒளி ஜாலங்களும், நடன அசைவுகளும் காண்போரை கவர்ந்தன.
கட்டடக் கலையின் அருங்காட்சியகம் என மகாபலிபுரத்தை பெருமிதப்படுத்திய குரல், சங்க இலக்கியங்களான தொல்காப்பியம், ஐந்திணை, திருக்குறள், சிலப்பதிகாரம் ஆகியவை குறித்தும் விவரித்தது. குறிப்பாக கண்ணகி காற்சிலம்பை உடைத்த நிகழ்வு காட்சிப்படுத்தப்பட்ட விதம் பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றது.
இறுதியாக இத்தனை பெருமைகளைக் கொண்ட தமிழருக்கு யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற புறநானூற்றுப் பாடல் வரிகளை கூறி கமல்ஹாசனின் குரல் விடைபெற அரங்கம் அதிர்ந்தது.