இலங்கைக்கான அனைத்து திட்டங்களையும் நிறுத்தியது ஜப்பான்!
கடனை செலுத்தாத காரணத்தினால் ஜப்பான் இலங்கையில் தனது அனைத்து வேலைத்திட்டங்களையும் இடைநிறுத்தியுள்ளதாக இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் உப தலைவர் துமிந்த ஹுலங்கமுவ விடுத்துள்ள அறிக்கையொன்றை இன்று ‘தி மோர்னிங்’ நாளிதழ் செய்தியாக வெளியிட்டுள்ளது.
ஜப்பான், அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்த போது, இலங்கையின் தாங்க முடியாத கடன் சுமைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் திட்டம் இல்லாமல் குறிப்பிடத்தக்க உதவிகளை வழங்க முடியாது என்பதை அவர்கள் சுட்டிக்காட்டியதாக TV Derana விற்கு வழங்கிய நேர்காணலில் அவர் கூறினார்.
இலங்கை மத்திய வங்கியின் (CBSL) கூற்றுப்படி, டிசம்பர் 2021 நிலவரப்படி, இலங்கைக்கு நிலுவையிலுள்ள கடனாக ஜப்பானில் இருந்து பெறப்பட்ட திட்டக் கடன்களின் அளவு ரூ.621 பில்லியன் ஆகும்.
மேலும், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) இரண்டாம் முனையத் திட்டத்தின் ஒப்பந்ததாரரான ஜப்பானைத் தளமாகக் கொண்ட Taisei நிறுவனம் தற்போதைய பொருளாதார நிலைமைக்கு மத்தியில் இலங்கையை விட்டு வெளியேறத் திட்டமிட்டுள்ளதாக ‘மார்னிங்’ நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.
விமான நிலையத் தலைவர் ஓய்வு பெற்றமேஜர் ஜெனரல் ஏ.சந்திரசிறி, இந்த விடயம் Taisei கூட்டுத்தாபனத்துடன் கலந்துரையாடப்பட்டு வருவதாகத் தெரிவித்தார், ஆனால் இவ்விவகாரத்தில் இரு நாடுகளின் தலையீடுகள் இருப்பதை கருத்தில் கொண்டு இரகசியம் பேணப்பட வேண்டிய தேவை உள்ளமையால் மேலதிக விவரங்களை வழங்க மறுத்துவிட்டார்.
இதன்படி, சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையின் முன்னேற்றத்தின் அடிப்படையிலேயே இந்தியா மற்றும் அமெரிக்காவும் இலங்கைக்கு ஆதரவளிக்க தீர்மானித்து உள்ளது என அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.