வன்முறையாளர்களை மன்னிக்கவே முடியாது! – கைது நடவடிக்கை தொடர்பில் ரணில் கருத்து.

“அமைதி வழியில் போராட்டம் செய்தவர்களுக்கு எதிராக எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்க முடியாது. அமைதி வழிப் போராட்டக்காரர்களை நான் அன்றும் மதித்தேன்; இன்றும் மதிக்கின்றேன். ஆனால், போராட்டம் என்ற பெயரில் பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தவர்களையும், அரச கட்டடங்களுக்குள் நுழைந்து பொருள்களைத் திருடியவர்களையும் மன்னிக்க முடியாது.”
– இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“போராட்டத்தின்போது வன்முறையில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேகநபர்களைக் கைதுசெய்து வருகின்றனர். குற்றாவளிகளுக்கு எதிராக நீதிமன்றம் தண்டனையை வழங்கும். இதில் எவரும் தலையிட முடியாது.
இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்துக்குள் அத்துமீறி நுழைந்து ஒளிபரப்புச் சேவைகளுக்கு இடையூறு விளைத்தவர்களை எப்படி மன்னிக்க முடியும்? அவர்களை எப்படி அஹிம்சை வழிப் போராட்டக்காரர்கள் என்று கூற முடியும்?
அஹிம்சை வழியில் போராடியவர்களில் அராஜக நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களும் உள்ளனர். அவர்களை அடையாளம் கண்டு கைது செய்யும் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு எதிராக எவரும் கூக்குரல் எழுப்ப முடியாது” – என்றார்.