பழங்குடியினர், பட்டியல் பிரிவினருக்கு எதிராக ஆன்லைனில் கருத்திட்டாலும், வன்கொடுமை சட்டம் பாயும்: நீதிமன்றம் தீர்ப்பு
பட்டியலின மற்றும் பழங்குடி மக்களுக்கு எதிராக ஆன்லைன் மூலமாக வசைகள், அவதூறு, இழிச்சொல்கள் பேசினால் அவர்கள் மீதும் எஸ்சி, எஸ்எடி வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம் என கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கேரளா மாநிலத்தில் யூடியூபர் ஒருவர் பழங்குடியின பெண், அவரின் கணவர், மாமனார் ஆகியோரின் பேட்டியை பேஸ்புக், யூடியூப் போன்ற இணையதளத்திலும் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த பேட்டியின் போது பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவர்களின் உறவினர்களை அவர்களின் சாதிய அடையாளம் ரீதியாக அவமதித்து, இழித்து பேசும் விதமாக அந்த யூடியூபர் கருத்து பதிவு செய்து அதை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ கடும் எதிர்வினைகளை சந்தித்ததை அடுத்து அந்த யூடியூபர் கைதுக்கு பயந்து முன்ஜாமின் கேட்டுள்ளார்.
இந்த வழக்கு கேரளா உயர் நீதிமன்றத்தின் விசாரணைக்கு வந்த நிலையில், நீதிபதி குரியன் தாமஸ் வழக்கை விசாரித்தார். இந்த டிஜிட்டல் காலத்தில் அனைத்து நபர்களும் ஆன்லைன் தளங்களின் மூலம் அவதூறுகள், இழிச்சொல்களை எதிர்கொள்ளும் நிலைக்கு ஆளாகின்றனர். எனவே, புகாரில் சிக்கியுள்ள நபர் அதை இணையத்தில் தான் வெளிப்படுத்தினேன் எனக் கூறி தப்ப முடியாது. எனவே, அவர் கூறிய இழிவான கருத்தை நேரடியாக வெளிப்படுத்தாமல் ஆன்லைன் மூலம் வெளிப்படுத்தினாலும் அது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை சட்டங்களின் கீழ் பொருந்தும், எனவே அவருக்கு முன் ஜாமின் தர முடியாது எனக் கூறி தீர்ப்பளித்துள்ளார்.
எஸ்சி, எஸ்டி பிரிவுகளை சேர்ந்த மக்களை சாதிய ரீதியாக அவமதிக்கும் விதமாக பேசுதல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் குற்றமாகும், இணையதளம் என்ற பொதுவெளியில் இவ்வாறு பேசுதலும் அவர்களை திட்டமிட்டே அவமதித்தல் என்பதால் இன்றைய டிஜிட்டல் காலத்தில் இணையத்தில் பதிவுகள் அப்லோட் செய்யப்பட்ட உடனேயே இணைய உலகின் முன் சம்பந்தப்பட்ட நபர்கள் அவமதிப்புக்கு ஆளாகின்றனர். எனவே, இந்த வன்கொடுமை சட்டம் ஆன்லைன் வசைகளுக்கும் பொருந்தும் எனக் கூறி முன் ஜாமின் தர முடியாது என கேரளா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.