வடக்கு மாகாண சபையில் தமிழ் முற்போக்கு கூட்டணி போட்டியிடும்- மனோகணேசன்

எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் முற்போக்கு கூட்டணி போட்டியிடும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் தெரிவித்தார்.
மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் யாழ்பாணத்தை சேர்ந்த பிரபல பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியிலேயே  மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
தென்னிலங்கைக்கு மேலதிகமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் போட்டியிடுமாறு பாரிய அழைப்புக்கள் எமக்கு விடுக்கப்படுகின்றன. அந்த அழைப்புக்களை பரிசீலனை செய்து வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் தேசிய நேசக் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடவுள்ளோம்.
மாகாண சபைத் தேர்தல் 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் என கூறப்படுகிறது. ஆனால் தேர்தல் திகதி குறித்து இன்னமும் அறிவிக்கப்படவில்லை. தேர்தல் நெருங்கும் போது கூட்டணி சம்மந்தமான முடிவுகளை உரிய நேரத்தில் எடுப்போம்.
நாம் வடக்கு, கிழக்கில் போட்டியிடும் போது தமிழ் முற்போக்கு கூட்டணியாக மாத்திரமே போட்டியிடுவோம். ஐக்கிய மக்கள் சக்தியாக ஒருபோதும் வடக்கு, கிழக்கில் போட்டியிட மாட்டோம். வடக்கு, கிழக்கு மாகாண சபைகளில் எங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி ரெலிபோன் சின்னம் வராது என்றார்.
மேலும் வடக்கு கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரோடு இணைந்து போட்டியிடுவீர்களா என மனோகணேசனிடம் வினவியபோது தமிழ் தேசியக் கூட்டமைப்பும் எங்களுடைய நேசக் கட்சிதான் அது போல் பல நேசக் கட்சிகள் வடக்கு, கிழக்கில் காணப்படுகின்றன. அவர்களோடு கலந்தாலோசித்து  எங்களது பயணத்தை தொடர்வோம் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.