ஓய்வுபெற்ற அதிபர் ஒருவர் கழுத்தறுத்துப் படுகொலை!
ஓய்வுபெற்ற பாடசாலை அதிபர் ஒருவர் கழுத்தறுத்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கொடூர சம்பவம் பலாங்கொடைப் பிரதேசத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.
ஆறு பிள்ளைகளின் தந்தையான அபேரத்ன (வயது 78) என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்யப்பட்டவர் வீட்டில் பல வருடங்களாகத் தனிமையில் வசித்து வந்துள்ளார். இன்று காலை தந்தைக்கு உணவு வழங்குவதற்காக மகன் ஒருவர் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது தந்தை கழுத்து வெட்டப்பட்ட நிலையில் வீழ்ந்து கிடந்துள்ளார். இதையடுத்துத் தந்தையை உடனடியாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலைக்கு மகன் கொண்டு சென்றுள்ளார்.
எவ்வாறாயினும், வைத்தியசாலைக்குக் கொண்டு செல்வதற்கு முன்னதாகவே குறித்த நபர் உயிரிழந்துவிட்டார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையைில், சடலம் பலாங்கொடை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் இரத்தினபுரி பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவினர் மற்றும் பலாங்கொடை பொலிஸ் நிலைய அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.