வடக்கு ஆளுநருக்கு எதிராக ரணிலிடம் டக்ளஸ் முறையீடு.
வடக்கு மாகாணத்தின் இரு மூத்த செயலாளர்களை மாகாணத்துக்கு வேண்டாம் என ஆளுநர் ஜீவன் தியாகராஜா கடிதம் வழங்கியமையக் கண்டித்தும் ஆட்சேபித்தும் ஜனாதிபதியின் செயலாளருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவசர கடிதம் அனுப்பிவைத்துள்ளார்.
வடக்கின் மூத்த செயலாளர்களான இ.இளங்கோவன் மற்றும் செந்தில்நந்தனன் மற்றும் விவசாயப் பணிப்பாளர் சிவகுமார் ஆகிய மூவரையும் ஜீவன் தியாகராஜா தூக்கியயறிந்தமை ஒரு தவறான முன்னுதாரணம் எனவும், குறிப்பாக மாகாணத்தில் உள்ள மூத்த அமைச்சரான தனது ஆலோசனையைக் கூடப் பெற்றுக்கொள்ளாது, நிர்வாக நடைமுறைக்கு முரணாக, மேற்கொண்ட இந்த விடுவிப்பு உத்தரவுகள் உடன் இரத்துச் செய்யப்பட வேண்டும் எனவும் அவசர கோரிக்கை அவரால் எழுத்தில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
ஒரே தடவையில் அதிக அதிகாரிகளை மாகாணத்துக்கு வெளியே அனுப்புவது மாகாணத்தின் பணியைப் பாதிக்கும் செயல் என்பதோடு, ஏனைய அதிகாரிகளையும் மனதளவில் பாதிக்கும் செயலாகவும் அமையும். நாடளாவிய சேவை உத்தியோகத்தர்களை இடமாற்ற பொதுச்சேவை ஆணைக்குழுவுக்குப் பரிந்துரைக்க முடியுமேயன்றி ஆளுநர் நேரடியாக இடமாற்றக் கடிதம் வழங்க முடியாது என்பதனையும் கருத்தில் கொள்ளுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதியின் செயலாளருக்கு நேரடியாகத் தொலைபேசியிலும் தெரிவித்துள்ளார்.
இவற்றை உடன் கவனத்தில் எடுப்பதாக ஜனாதிபதியின் செயலாளர் பதிலளித்துள்ளமையால் ஆளுநர் ஜீவன் தியாகராஜாவா, நிர்வாக நடைமுறையா என்ற போட்டி எவ்வளவு உச்சம் பெறும் என்பது இன்று தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேநேரம் மேலும் வேறு மூத்த அதிகாரிகள் இருவர் குறித்த விடயத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நேரடிக் கவனத்துக்குக் கொண்டு சென்று ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின் உத்தரவை இரத்துச் செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.