IMF உடனான பேச்சுக்களில் எதிர்பார்த்தளவு முன்னேற்றம்.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிகளை நிவர்த்தி செய்து, சிறந்த பொருளாதார நடைமுறையை நாட்டில் ஏற்படுத்துவதற்காக அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில் இடம்பெற்றுவரும் கலந்துரையாடல்கள் உயர் முன்னேற்றத்தை அடைந்துள்ளன என ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெறும் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றத்தை அடைந்துகொள்ள வேண்டுமாயின், கடன் நிலைபேற்றுத்தன்மை குறித்து முறையானதொரு திட்டம் முன்வைக்கப்பட வேண்டி இருந்தது. கடந்த காலத்தில் காணப்பட்ட ஸ்திரதன்மையற்ற அரசியல் நிலைமை மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்படாத முன்னைய அரசாங்கத்தின் அரசியல் கொள்கை காரணமாக இது தடைப்பட்டிருந்தது.
தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில், முழுமையான அரசியல் ஸ்திரத்தன்மை கொண்ட அரசாங்கம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது.
அதேபோன்று, சர்வகட்சி ஆட்சிக்கான அரசியல் பேச்சுவார்த்தைகளும் மிகவும் வெற்றிகரமான நிலையில் உள்ளன.
அதன்படி, சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக நிறைவு செய்து, நிதி ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு தேவையான முதற்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.