மனோ, ஹக்கீம், ரிஷாத் அணிகள் சர்வகட்சி அரசுக்குப் பச்சைக்கொடி.
சர்வகட்சி அரசில் இணைவதற்குத் தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்குப் பச்சைக்கொடி காட்டியுள்ளன என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
அடுத்த இரு வாரங்களுக்குள் சர்வகட்சி அரசு அமைப்பதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ள ஜனாதிபதி, சர்வகட்சி அரசை அமைப்பதற்கு ஒன்றிணையுமாறு நேற்று அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் மூலம் அழைப்பும் விடுத்துள்ளார்.
இது சம்பந்தமாக கட்சிகளுடன் ஜனாதிபதி நேரில் கலந்துரையாடி வருகின்றார். இதற்கமைய ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் நேற்றுமுன்தினம் அவர் பேச்சு நடத்தினார். அக்கட்சியும் சாதக சமிக்ஞையை வெளிப்படுத்தியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியிலிருந்து விலகி சுயாதீனமாகச் செயற்படும் சம்பிக்க ரணவக்க எம்.பியும் சாதகமான நிலைப்பாட்டிலேயே உள்ளார்.
இந்நிலையிலேயே மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணியும், ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் மற்றும் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் ரணிலுக்கு நேசக்கரம் நீட்டவுள்ளன.