225 எம்.பி.க்களுக்கும் ரணில் கடிதம்.
சர்வகட்சி அரசாங்கத்தில் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடு எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடியுடன் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் சமூக அராஜகத்தை படிப்படியாக மீளப்பெற அரசாங்கம் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதுள்ள சவால்களை வெற்றிகொள்வதற்கு பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகள், கல்விசார் குழுக்கள், சிவில் அமைப்புகள் போன்றவற்றின் பங்களிப்புடன் வேலைத்திட்டமொன்றை அமுல்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி கூறுகிறார்.
நாட்டின் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகளுக்கு பொதுவான வேலைத்திட்டம் ஒன்றின் மூலம் தீர்வு காண பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமது மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் பாடுபடுவார்கள் என்பதே இத்தருணத்தில் மக்களின் எண்ணமாகும்.
அதற்கமைய, தேசியப் பொறுப்பை நிறைவேற்றுவதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து பொது உரையாடலை உருவாக்கி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியின் உடன்பாட்டைப் பெறுவதற்கு உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.