வெளிச்சத்திற்கு வந்த பிரபல மருத்துவக் கல்லூரியின் ராகிங் கொடுமை
மத்தியப் பிரதேசம் இண்டோர் மாவட்டத்திலுள்ள எம்ஜிஎம் மருத்துவக் கல்லூரியில் மூத்த மாணவர்களால் நடத்தப்பட்ட ராகிங்கால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் யுஜிசி ஆன்டி ராகிங் கமிட்டியை தொடர்புகொண்டுப் புகார் தெரிவித்துள்ளார்கள். புகாரில் தெரிவிக்கப்பட்டது உண்மை என்பதை உறுதிப்படுத்திய கல்லூரி காவல்துறையிடம் புகார் அளித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
எம்ஜிஎம் மருத்துவக் கல்லூரியில் மூத்த மாணவர்கள் தங்களுடன் படிக்கும் ஜூனியர் மாணவர்களைக் கொடுமையான மற்றும் தகாத முறையில் ராகிங் செய்துள்ளனர். அதில் தலைகாணியுடன் செக்ஸ் வைத்துக் கொள்ளுமாறு செய்யச் சொல்வது, சக வகுப்பு மாணவிகளை கொச்சை வார்த்தைகளால் பேச சொல்வது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இதனைப் பதிவு செய்யாமல் இருக்க மாணவர்களின் கைப்பேசிகளை விடுதி வளாகத்துக்குள் பிடுங்கி வைத்துள்ளனர்.
ஜூனியரை கல்லூரியில் விடுதி மற்றும் வகுப்பறைக்கு மட்டும் அனுமதித்துள்ளனர். வேறு எங்குச் செல்ல வேண்டும்மென்றலும் இவர்களிடம் கேட்டுத் தான் செல்ல வேண்டும். இதனை மறுத்த மாணவர்களை மேலும் கொடுமைப்படுத்தியுள்ளனர். அவர்களை அடித்ததும் உண்டு என்று கூறப்பட்டுள்ளது. இந்த ராகிங் கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் யுஜிசி ஆன்டி ராகிங் கமிட்டி உதவி தொலைப்பேசி எண்ணுக்குத் தொடர்புகொண்டு புகார் அளித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து கல்லூரிக்கு வந்த தகவலை வைத்து கல்லூரி இதனைப் பற்றி விசாரித்து புகார் உண்மை என்பதை உறுதி செய்தது. மேலும் காவல்துறையில் புகார் அளித்தனர்.
காவல்துறை பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் விசாரணை நடத்திக் கொண்டுவருகிறது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் அளித்த தகவலில் எந்த அளவிற்கு ராகிங்கால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கல்லூரியில் நடந்த ராகிங் பற்றி ஆசிரியர்கள் அறிந்தும் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த புகாரானது மாணவனின் மேல் அளிக்கப்பட்ட நிலையில் அவனுடன் சேர்ந்து 7 அல்லது 8 பேர் கொண்ட குழுவைக் காவல்துறை விசாரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து அனைத்து ஜூனியர் மாணவர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.
மாணவர்கள் அளித்த புகாரில், எங்களைக் கட்டாயப்படுத்தி ஒருவரை ஒருவர் கன்னத்தில் அறையச் சொல்லினர். அதனைச் செய்யவில்லை என்றால் அடித்தனர் . எங்கள் தொலைப்பேசிகளை பிடுங்கிக் கொண்டனர். மாணவியர்களின் உடல், நிறம் போன்றவற்றை வைத்துப் பேசச் சொல்லிக் கொடுமைப்படுத்தினர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்குத் தொடர்பான ரெகார்டிங், வாட்ஸ்அப் செய்திகளை காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதனை விசாரணை செய்யும் காவல் அதிகாரி தெஹ்சீப் காசி தெரிவிக்கையில், மாணவர்களிடமிருந்து தகவல்களைப் பெற்றுக்கொண்டோம். குற்றவாளிகளைக் கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.