யாழ். நகரில் அலைபேசி திருடி வந்த மூவர் கைது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் பஸ்களில் அலைபேசி திருட்டில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் மூன்று சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்களிடம் இருந்து சுமார் 15 இலட்சம் ரூபா பெறுமதியான 45 அலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் நகரில் கடந்த 3 மாதங்களில் திருட்டுக்கள் தொடர்பில் அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று வந்த நிலையில், அது தொடர்பில் யாழ். தலைமையகப் பொலிஸ் நிலையக் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.
விசாரணைகளின் அடிப்படையில் யாழ்ப்பாணம், நாவற்குழி மற்றும் அரியாலைப் பகுதிகளைச் சேர்ந்த 23 , 24 மற்றும் 27 வயதுடைய மூன்று சந்தேகநபர்களை நேற்றுக் கைதுசெய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.
விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர்கள் கூறிய தகவலின் பிரகாரம், சுமார் 15 இலட்சம் ரூபா பெறுமதியான ஐ போன் உட்பட 45 அலைபேசிகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
அதேவேளை, போதைக்கு அடிமையானதால், தமக்கு அதிகளவான பணம் தினமும் தேவைப்பட்டதால், திருட்டில் ஈடுபட்டு வந்தனர் என்றும், யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் பஸ்களில் அலைபேசியைச் திருடி வந்தனர் என்றும் பொலிஸாரிடம் மூவரும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
குறித்த காலப்பகுதிக்குள் அலைபேசிகள் திருட்டுப் போயிருந்தால், உரியவர்கள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு வந்து தமது அலைபேசியை அடையாளம் காட்டுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.