இந்தியாவில் குரங்கம்மை பாதிப்புக்கு ஆளான முதல் நபர் குணமடைந்தார் – கேரள சுகாதாரத்துறை அமைச்சர்
நாட்டின் முதல் குரங்கம்மை பாதிப்பு ஜூலை 14ஆம் தேதி கேரளாவைச் சேர்ந்த நபருக்கு கண்டறியப்பட்டது. இவர் தற்போது முழுமையாக குணம் அடைந்து இன்று டிஸ்சார்ஜ் ஆவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
ஆப்ரிக்கா நாடுகளில் அதிகம் காணப்படும் குரங்கம்மை வைரஸ் தொற்று கடந்த மே மாதம் ஐரோப்பிய நாடுகளில் பரவத் தொடங்கியது. பின்னர், அமெரிக்கா, ஆசிய ஆகிய உலக நாடுகள் முழுவதும் தீவிரமாக பரவிவருவதை அடுத்து இதை மருத்துவ அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. இந்நிலையில், இந்தியாவில் முதல் குரங்கம்மை பாதிப்பானது கேரளாவில் பதிவானது. வெளிநாட்டில் இருந்து திரும்பிய 35 வயது நபருக்கு ஜூலை 14ஆம் தேதி குரங்கம்மை பாதிப்பு உறுதியானது. இதைத் தொடர்ந்து அவர் திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
அவர் முழுமையாக கண்காணிக்கப்பட்டு சிகிச்சை உரிய அளிக்கப்பட்டு வந்த நிலையில், 72 மணி நேரத்திற்கு ஒரு முறை அவரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு பாதிப்பு தன்மை உறுதி செய்யப்பட்டது. மேலும், பாதிப்புக்குள்ளான நபருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என முடிவில் உறுதியானது.
இந்நிலையில், பாதிப்புக்கு ஆளான 35 வயது நபர் சுமார் 16 நாள்களுக்கு பின் தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளார். இதை அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நலமாக உள்ள அவர், இன்று மாலை டிஸ்சார்ஜ் ஆக உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த குரங்கம்மை பாதிப்பால் கேரளாவில் மேலும் இருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களின் உடல் நிலை சீராக உள்ளதாகவும், உரிய முறையில் இவர்கள் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் 75க்கும் மேற்பட்ட நாடுகளில் 18,000க்கும் மேற்பட்டோருக்கு குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நோய் பாதிப்பு காரணமாக பிரேசில் நாட்டை சேர்ந்த ஒருவரும், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.