அரசியல் தீர்வு கோரி வடக்கு, கிழக்கில் 100 நாள் போராட்டம்!

“வடக்கு, கிழக்கு மக்களுக்குக் கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டி ‘கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்’ எனும் தொனிப் பொருளில் 100 நாட்கள் அடங்கிய கவனயீர்ப்புப் போராட்டம் எதிர்வரும் முதலாம் திகதி மன்னாரில் ஆரம்பிக்கப்படவுள்ளது. தொடர்ந்து வடக்கு, கிழக்கின் 8 மாவட்டங்களில் சுழற்சி முறையில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும்.”
– இவ்வாறு வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் கண்டுமணி லவகுகராசா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
‘கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்’ எனும் 100 நாட்கள் செயல் முனைவானது வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் அனுசரணையுடன் வடக்கு – கிழக்கிலுள்ள 8 மாவட்டங்களிலும் சுழற்சி முறையில் வடக்கு கிழக்கு வாழ் பொதுமக்கள், கிராம அடிப்படை அமைப்புகள், விவசாய, மீனவ சங்கங்கள், பெண்கள் அமைப்புகள், மாணவர் அமைப்புகள், சிவில் அமைப்புகள் ஆகிய தரப்புக்கள் இணைந்து மேற்கொள்ளப்படவிருக்கின்றது.
குறித்த 100 நாட்கள் செயல் முனைவின் முதலாம் நாள் மக்கள் குரல் மன்னார் மாவட்டத்தில் எதிர்வரும் முதலாம் திகதி ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது. இதனை த் தொடர்ந்து ஏனைய மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக சுழற்சி முறையில் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெறும். அதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
எனவே, இந்த ஜனநாயக ரீதியான போராட்டத்தில் அனைத்துத் தமிழ் மக்களும் கலந்துகொண்டு எமக்கான அரசியல் தீர்வை வலியுறுத்துவோம்” – என்றுள்ளது.