மக்கள் நேசமிகு இலங்கை தலைவர்கள் யார்? – ரசிக ஜெயக்கொடி (Video)
இலங்கையில் நாம் தேர்வு செய்த தலைவர்கள் மக்கள் மீது நேசம் கொண்டவர்களா?
முதலில் உலகில் சிறந்த தலைவர்கள் என அடையாளப்படுத்தப்படுவோர் யார்?
நெல்சன் மண்டேலா , மகாத்மா காந்தி , மார்டின் லூத்தர் கிங் போன்றோரை சிறந்த தலைவர்கள் என உலகம் ஏற்றுக் கொள்கிறது.
இவர்களிடமுள்ள குணாம்சம்கள் என்ன?
இவர்களிடம் தமது சுயநலத்தை மீறிய , நல்லதை நோக்கி பார்க்கும் தூர நோக்கான கண்ணோட்டம் ஒன்று இருந்து உள்ளது.
இலங்கையின் தலைவர்களில் எவரிடமும் , நல் எண்ணம் கொண்ட தூர நோக்கு இல்லை. எனவே இங்கே யாரும் சிறந்த தலைவர்களாக இல்லை.
இலங்கையில் ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்களில் மிகவும் திறமையானவர்கள் இருந்தனர் – ஆனால் அவர்களில் சிறந்தவர்கள் என யாரும் இல்லை.
பண்டாரநாயக்கா மிகவும் திறமையான, புத்திசாலியான மனிதர். அவர் லண்டன் ஒக்ஸ்போர்ட் கல்லூரியில் மாணவ தலைவராகவும் இருந்தார். அதிகமாக படித்தவர்.
அவர் ஏன் சிறந்த தலைவராகவில்லை?
அவரது புத்திசாலித்தனத்தை எல்லாம் பயன்படுத்தி , மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி அதிகாரத்தைப் பெறும் குறுகிய எல்லைக்குள் மட்டுமே அந்தத் திறமையைப் பயன்படுத்தினார். ஜனரஞ்சகமான மனிதராக இருந்த பண்டாரநாயக்க , 24 மணி நேரத்தில் சிங்கள மொழியை தேசிய மொழியாக்குகிறார். அப்படியான செயல்பாடுகளை அவர் அதிகாரத்தை கைப்பற்றும் குறுகிய எண்ணங்களோடுதானே செய்தார்? அதனாலேயே பண்டாரநாயக்கவால் சிறந்த தலைவராக முடியாமல் போனது .
ஜே.ஆர் , அவர் மிகவும் சாதுர்யமான புத்திசாலித்தனம் கொண்ட ஒரு திறமையான அரசியல்வாதி.
தனது நுட்பமான நுண்ணறிவைப் பயன்படுத்தி செயல்பட்ட ஜே.ஆர். , அவரது தலைமைத்துவத்தில் செய்தது என்ன ?
நாடாளுமன்றத்தின் பதவிக்காலத்தை நீட்டித்து, எதிர்க்கும் அரசியல் கட்சிகளை தடை செய்து, தங்கள் கட்சி என்றென்றும் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதற்காக அரசியல் கேம் ஆடியது மட்டும்தானே அவரது அறிவைக் கொண்டு பயன்படுத்தப்பட்டது இல்லையா?
ஜே.ஆர் தனது புத்திசாலித்தனத்தை இந்த குறுகிய எல்லைக்கு அப்பால் பயன்படுத்தி இருக்கவில்லைதானே?
ஜே.ஆர் அதனால் தான் எவ்வளவு திறமைசாலியாக இருந்த போதிலும், அவரால் சிறந்ததொரு தலைவராக முடியாமல் போனது.
இன்றும் இந்நிலை மாறவில்லை அல்லவா?
இலங்கை எவ்வளவு பெரிய நெருக்கடியான நிலையில் இருந்தாலும், இந்த நேரத்திலும், இலங்கையின் 3 அரசியல் கட்சி தலைவர்கள் என்ன செய்கிறார்கள் என பாருங்கள்,……
அதிகாரத்தைப் பெறுவது அல்லது தங்கள் அதிகாரத்தைக் காப்பாற்றுவது என்ற குறுகிய எல்லையைத் தாண்டி இந்தப் பிரச்சினையில் இவர்கள் யாருமே தலையிடத் தயாராக இல்லை.
ராஜபக்ச, ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, அனுர திஸாநாயக்க ஆகியோர் இந்த பிரச்சினையை தங்கள் சொந்த அல்லது தங்கள் கட்சிகளின் தனிப்பட்ட அரசியல் திட்டங்களுக்குள் இருந்தே பார்க்கிறார்கள்.
அந்த குறுகிய எல்லைக்கு அப்பாற்பட்ட உலகத்தை அவர்கள் எட்டிக்கூட பார்ப்பதில்லை. அவர்களுக்கு அப்படி பார்க்க வேண்டிய அவசியமும் இல்லை.
மொட்டு கட்சியின் ராஜபக்சவினர் இந்த இடறுக்கு பின்னர் , எப்படி மீண்டு ஆட்சியை பிடிப்பது என திட்டம் தீட்டுகிறார்கள். அதிலும் நாமல் ராஜபக்சவை எப்படி தலைமை பீடத்துக்கு கொண்டு வருவது என கணக்கு போட்டு காய் நகர்த்துகிறார்கள்.
சஜித்தும் , அவரது கட்சிக்காரர்களும் இந்த ஆட்சி முடிந்து எப்படி நாங்கள் ஆட்சியை பிடிப்பது என கணக்கிடுகிறார்கள். இந்த மோசமான காலத்தில் நுழையாமல் இழுத்தடித்து , 5 ஆண்டுகளுக்கு பிறகு போட்டியிட்டால் தனி ஆட்சியையும் , ஜனாதிபதி கதிரையையும் இலகுவில் பெறலாம் என எண்ணி காலம் கடத்துகிறார்கள்.
JVP , எந்த ஒரு பொறுப்பையும் ஏற்பதில்லை. அத்தோடு எவரோடும் இணைந்து செயலாற்ற விருப்பமும் அவர்களிடம் இல்லை.
சர்வ கட்சி அரசு ஒன்றை உருவாக்க அவர்கள் உண்மையாக முயலவே இல்லை. அவர்களுக்கு தெரியும் இதில் தலையை கொடுத்தால் தங்களது எண்ணம் சிதைந்துவிடும் என்பது …… தங்களது எதிர்பார்ப்பு பிழைத்துவிடும் என நினைத்து பின் வாங்குகிறார்கள்.
இவர்கள் அனைவரது எண்ணமும் சுயநலமிக்க எண்ணமாகவேதான் இருக்கிறது.
இவர்களிடமிருக்கும் அனைத்து திறன்களையும் – சக்திகளையும் – சிந்தனைகளையும் , குறுகிய மற்றும் சில்லறைத்தனமான செயல்பாடுகளுக்கே பாவிக்கிறார்கள்.
பரந்த சித்திரம் ஒன்றை எடுத்து பார்த்தால் , ஆட்சியை கைப்பற்றுவதை தவிர வேறோர் குறிக்கோளும் இவர்களிடம் இல்லை.
இப்படியான சங்கடமான நிலையில் இன்னும் பல பிரதமர்களும் , ஜனாதிபதிகளும் மாறி மாறி வர வாய்ப்பு உள்ளது. அப்படி 1 – 2 – 3 வருடங்களுக்கு ஜனாதிபதியாவதல்ல வேலை. ஒரு இனத்தை பலப்படுத்தி (இனம் என்பது இவரது பார்வையில் இலங்கையர்) , ஒரு சிறந்த தலைவராக விளங்குவது எப்படி என்பதே இங்கே முக்கியமானது. அதோடு தேசத்தை வளமாக்கும் எதிர்கால திட்டமிடல்கள் மற்றும் தேசத்தை உயர்வடைய பங்களிப்பு செய்ய இவர்களில் எவரும் தயாராக இல்லை எனத் தெரிகிறதுதானே?
ஒவ்வொரு கட்சி ஆதரவாளர்களும் , அவர்களது குறுகிய வட்டத்துக்குள்ளேயே சிந்திக்கிறார்கள். அதைவிட்டு அவர்களும் தேசிய அல்லது தேசத்தின் நலன் என்ற நோக்கத்தோடு அதைவிட்டு வெளியே வந்து சிந்திப்பதில்லை.
பெற்றோல் கியூவில் அல்லது பொருட்களை வாங்கும் இடத்தில் கியூவில் நிற்கும் போது சற்று சிந்தித்து பாருங்கள். நாங்கள் எங்கு தவறிழைத்தோம் என ஒரு கணம் யோசியுங்கள். அந்த தவறை விட்டவர்கள் நாமாகத்தான் இருப்போம்.
எனவே நாம் தேர்ந்தெடுத்த தலைவர்கள் , எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும், இவர்கள் எல்லாம் மிகவும் ‘சிறிய மனிதர்கள்’ – குறுகிய எல்லைக்குள் சிக்கிக் கொண்டவர்கள்.
ஒரு நாட்டிற்கு ஏற்படக்கூடிய சோகமான விதி இது!
– ரசிக ஜெயக்கொடி