‘மொட்டு’வின் ஆதிக்கம் இல்லாத சர்வகட்சி ஆட்சி வேண்டும்! – சுமந்திரன் வலியுறுத்து.
“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வகட்சி ஆட்சியை அமைக்க விரும்பினால் அதனை நாம் வரவேற்போம். பொருளாதாரச் சிக்கலில் இருந்து நாடு மீண்டெழ சர்வகட்சி ஆட்சிதான் ஒரே வழி. ஆனால், அது உண்மைத்தன்மையான சர்வகட்சி ஆட்சியாக இருக்க வேண்டும். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆதிக்கத்தில் இருக்கின்ற சர்வகட்சியாக அது இருக்கக்கூடாது.”
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
வவுனியாவில் அமைந்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் இன்று கட்சி உறுப்பினர்களுடன் நடத்திய கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சர்வகட்சி அரசில் இணைந்து கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனுப்பிய கடிதம் எனக்கும் கிடைத்துள்ளது.
பொருளாதார நெருக்கடியில் இருந்து நாடு மீண்டு வர வேண்டுமாக இருந்தால் குறுகிய காலத்துக்காவது சர்வகட்சி ஆட்சி அமைய வேண்டும். இல்லையெனில் அரசியல் ஸ்திரத்தன்மையைப் பேண முடியாது.
அப்படியொரு சர்வகட்சி ஆட்சி வேண்டும் என்பதற்காகத்தான் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஜனாதிபதித் தெரிவின்போது டலஸ் அழகப்பெருமவுக்கு நாம் ஆதரவு கொடுத்தோம்.
எதிர்க்கட்சியில் அமைந்துள்ள அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் உள்ள சிலரும் இணைந்து ஆட்சி அமைத்தால்தான் அது சர்வகட்சியாக இருக்க முடியும்.
இந்நிலையில், ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்தவர்கள் முழுக்க முழுக்க ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக் கட்சிக்காரர்கள். அவர்கள் ஒன்றாகச் செயற்பட்டமையால் சர்வகட்சி ஆட்சியை அமைக்க முடியாமல்போனது.
ஆனால், தற்போது ஜனாதிபதியாக வந்த பின் ரணில் விக்கிரமசிங்க ஒரு சர்வகட்சி ஆட்சியை அமைக்க விரும்பினால் அதனை நாம் வரவேற்போம். பொருளாதாரச் சிக்கலில் இருந்து நாடு விடுபட அதுதான் ஒரே வழி. ஆனால், அது உண்மைதன்மையான சர்வகட்சி ஆட்சியாக இருக்க வேண்டும். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆதிக்கத்தில் இருக்கின்ற சர்வகட்சியாக அது இருக்கக்கூடாது. ஏனெனில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, மக்கள் ஆணையை இழந்த கட்சி. அதனாலேயே அந்தக் கட்சியின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் பதவி விலகியிருந்தார்கள்” – என்றார்.