போராட்டக்காரர்களை வேட்டையாடுவதை உடனடியாக நிறுத்தவேண்டும் ஜனாதிபதி.
“அமைதியான போராட்டக்காரர்களை அடக்கி வேட்டையாடும் கோழைத்தனமான நடவடிக்கைகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உடனடியாக நிறுத்த வேண்டும்.”
இவ்வாறு ஜே.வி.பியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தினார்.
கைது நடவடிக்கை தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
போராட்டக்காரர்களைக் கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்தால் ஆகஸ்ட் 09ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்கவும் ஜனாதிபதிப் பதவியிலிருந்து விலகும் நிலை ஏற்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
இதேவேளை, மக்கள் எதிர்கொள்ளும் எரிபொருள், எரிவாயு, உரம் மற்றும் மருந்துப் பற்றாக்குறையைத் தீர்ப்பதன் மூலம் மட்டுமே போராட்டத்தை நிறுத்த முடியும் என்று ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“அடக்குமுறை அல்லது மிரட்டல் மூலம் போராட்டத்தை ஒருபோதும் நிறுத்த முடியாது. அது அரசியல் நெருக்கடியை மோசமாக்கும். அரசியல் நெருக்கடி மோசமடைந்தால், பொளாதார நெருக்கடிக்கான தீர்வுகளும் தாமதமாகும்” – என்றார்.