உப்பளத்தில் இளம் பெண் கழுத்து நெரித்து கொலை : அது குறித்த திடுக்கிடும் தகவல்கள் ..

மன்னாரில் இளம் பெண் கழுத்து நெரித்து கொலை! தற்போது வெளியாகிய திடுக்கிடும் பின்னணி
குடும்பத்தில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக நெடுந்தீவைச் சேர்ந்த இளம் பெண்ணை மன்னாருக்கு அழைத்துச் சென்று கொலை செய்து உப்பளத்தில் வீசிய சம்பவம் தொடர்பில் அந்தப் பெண்ணின் சகோதரி உள்ளிட்ட இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொலையின் பிரதான சந்தேக நபரனான இளம் பெண்ணின் மாமனார் தலைமறைவாகிய நிலையில் தேடப்பட்டு வருகிறார்.
மன்னார் பொலிஸாரின் புலன் விசாரணையில் மன்னார் நகரில் உள்ள உணவகம் ஒன்றின் சிசிரிவி கமரா பதிவை வைத்து நெடுந்தீவைச் சேர்ந்த பெண்கள் இருவரும் ஒரு வாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். செட்டிக்குளத்தில் வசிக்கும் பிரதான சந்தேக நபர் தற்போது தலைமறைவாகியுள்ளார்.
நெடுந்தீவைச் சேர்ந்த டொறிக்கா ஜூயின் வயது 21 என்ற இளம் பெண்ணே இவ்வாறு கழுத்து நெரிக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு மன்னார் உப்பளத்தில் வீசப்பட்டிருந்தது.
அவரது சடலம் மன்னார் உப்பளம் பகுதியில் இருந்து கடந்த 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை பொலிஸாரால் மீட்கப்பட்டது.
சம்பவத்தையடுத்து மன்னார் தலைமையகப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர். தடயவியல் பொலிஸாரின் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் தடயப்பொருள்களும் மீட்கப்பட்டன. சட்ட மருத்துவ அதிகாரியின் அறிக்கையின் படி பெண்ணின் கழுத்து நெரிக்கப்பட்டு, அவரது கால்கள், கைகள் பிடித்து வைத்திருக்கப்பட்ட நிலையில் மூச்சுத் திணறலால் உயிரிழந்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் அடையாளங்களைக் கொண்டு அவர் தொடர்பில் மடு மற்றும் மன்னார் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதன்போது மன்னாரில் உள்ள உணவகம் ஒன்றில் கொல்லப்பட்ட இளம் பெண், இரு பெண்கள் மற்றும் ஆண் ஒருவரும் சென்று உணவு உட்கொண்ட காட்சி பதிவாகியிருந்தது. அந்தக் காட்சியைப் பெற்ற பொலிஸார், விசாரணைகளை முன்னெடுத்தனர்.
ஆரம்பத்தில் அந்தப் பெண்கள் நாவற்குழி என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் அங்கு அவர்கள் இல்லை. தொடர்ச்சியாக முன்னெடுத்த விசாரணைகளில் கொல்லப்பட்ட பெண் நெடுந்தீவைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டது.
அதனடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் கொல்லப்பட்ட இளம் பெண்ணின் சகோதரி வயது -30, அவரது பெரியதாயின் மகனின் மனைவி ஆகிய இருவரும் நெடுந்தீவில் வைத்து நேற்றுக் கைதுசெய்யப்பட்டனர்.
அவர்கள் இன்று மன்னாருக்கு அழைத்துச் செல்லப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டது. விசாரணைகளின் பின்னர் இருவரும் மன்னார் நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்படவுள்ளனர்.
அத்துடன், தலைமறைவாகியுள்ள 50 வயதுடைய பிரதான சந்தேக நபரான கொல்லப்பட்ட பெண்ணின் மாமனார் தேடப்பட்டு வருகிறார்.
“சகோதரியின் கணவருக்கும் கொல்லப்பட்ட இளம் பெண்ணுக்கும் இடையே தொடர்பு உள்ளதாக அவரது சகோதரி சந்தேகம் கொண்டுள்ளார். இந்தச் சந்தேகத்தால் சகோதரிகள் இடையே முரண்பாடு நீடித்துள்ளது.
இளம் பெண்ணின் தந்தை காலமாகிய நிலையில் தாயார் வெளிநாட்டில் உள்ளார். அவரது தாயின் சகோதரன் செட்டிக்குளத்தில் உள்ளார். அவர் வெளிநாட்டு முகவர் நிலையத்துடன் தொடர்புடையவர். அதனால் கொல்லப்பட்ட இளம் பெண்ணை வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறியுள்ளார்.
அதனால் கொழும்பில் சில ஆவணங்கள் கையளிக்கவேண்டும் என்று தெரிவித்து சகோதரிகள் இருவரையும் அவர்களது பெரியதாயின் மகனின் மனைவியையும் அழைத்துக் கொண்டு மன்னார் பயணித்துள்ளார். அங்கு நகரில் நடமாடிவிட்டு உப்பளத்தில் எவரும் இல்லை என அறிந்து இளம் பெண்ணை மூவரும் அங்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு மாமன் கழுத்தை நெரிக்க மற்றைய இரு பெண்களும் கால்களையும் கைகளையும் பிடித்துவைத்திருந்துள்ளனர். உயிர் பிரிந்ததும் அங்கிருந்து தப்பித்துள்ளனர்” என்று விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
மன்னார் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் பந்துல வீரசிங்க, உப பொலிஸ் பரிசோதகர் மஞ்சுள ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் உப பொலிஸ் பரிசோதகர் கங்காபதி ஆர்த்தனன் தலைமையில் உப பொலிஸ் பரிசோதகர் சோமதிலக, பொலிஸ் சார்ஜன்ட் பியசேன, பொலிஸ் கொஸ்தாபல் வரதன், நிசாந்தன், பெண் பொலிஸ் கொஸ்தாபல் பிரியா மற்றும் பொலிஸ் சாரதி ஜனந்தன் ஆகியோர் அடங்கிய பொலிஸ் பிரிவே இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.