ஒரே குடும்பத்தில் 4 ஐஏஎஸ், ஐபிஎஸ்.. அசத்தும் சகோதர, சகோதரிகள்.. மகிழ்ச்சியின் உச்சத்தில் தந்தை
உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு சகோதர, சகோதரிகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றிபெற்று அசத்தியுள்ளனர். தந்தையில் உந்துதலின் பேரில் இந்த பிள்ளைகளும் ஆர்வத்துடன் படித்து இந்த சாதனையை புரிந்துள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் லால்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அனில் பிரகாஷ் மிஸ்ரா. இவர் கிராமிய வங்கியில் மேலாளராக உள்ளார். இவருக்கு யோகேஷ் மிஸ்ரா, ஷமா மிஸ்ரா, மாதுரி மிஸ்ரா, லோகேஷ் மிஸ்ரா என்ற நான்கு பிள்ளைகள் உள்ளனர். கிராமிய வங்கி அதிகாரியான அனில் பிரகாஷுக்கு தனது இரு ஆண் பிள்ளை மற்றும் இரு பெண் பிள்ளைகளும் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதில் ஆரம்பத்தில் இருந்தே கவனம் இருந்துள்ளது. எனவே, நல்ல பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்க வைத்ததோடு மட்டுமல்லாது தனது பிள்ளைகள் நால்வரையும் ஐஏஎஸ் தேர்வு என பிரபலமாக அழைக்கப்படும் யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராக ஆலோசனை வழங்கி வந்துள்ளார்.
அதன் பேரில் நான்கு பிள்ளைகளும் தாங்கள் படிக்கும் காலம் முதலே தேர்வுக்கான தயாரிப்புகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். முதல் மகனான யோகேஷ் மிஸ்ரா பொறியியல் பட்டம் பெற்று தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டே ஐஏஎஸ் தேர்வுக்கு தயாரானர். இதைத் தொடர்ந்து 2013ஆம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற அவர் ஐஏஎஸ் அதிகாரியாகப் பொறுப்பேற்றார்.
அவரது தங்கையான இரண்டாவது பிள்ளை ஷமா மிஸ்ரா கல்லூரி படிப்பு படித்து முடித்த பின்னர் மூன்று முறை ஐஏஎஸ் தேர்வு எழுதி தோல்வியை தழுவினார். இருப்பினும் மனம் தளராது தனது படிப்பை தொடர்ந்த அவர், நான்காவது முறை யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று தற்போது ஐபிஎஸ் அதிகாரியாக உள்ளார். மூன்றாவது பிள்ளையான மகள் மாதுரி மிஸ்ரா 2014ஆம் ஆண்டிலேயே யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று ஐஏஎஸ் அதிகாரியாக உள்ளார். கடைசி மகனான லோகேஷ் மிஸ்ராவும் யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 44 ரேங்க் எடுத்து ஐஏஎஸ் அதிகாரியாக உள்ளார்.
இவ்வாறு தனது 4 பிள்ளைகளையும் தனது ஆசைப்படி ஐஏஎஸ் அதிகாரிகளாக உருவாக்கிவிட்டார் தந்தை அனில் மிஸ்ரா. நான் இப்போது தலைநிமிர்ந்து வாழ்கிறேன் என்றால் அதற்கு எனது பிள்ளைகள் தான் காரணம். இதை விட எனக்கு என்ன வேண்டும் சொல்லுங்கள் என நெகிழ்ச்சியோடு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார் அனில் மிஸ்ரா.