அதிமுக பொதுக்குழு விவகாரம்.. உயர் நீதிமன்ற உத்தரவால் உச்ச நீதிமன்றம் அதிருப்தி..
அதிமுக பொதுக்குழு தொடர்பாக கடந்த 6-ஆம் தேதி தாங்கள் வழங்கிய தீர்ப்பை சரியாக புரிந்து கொள்ளாமல், உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
கடந்த 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என உத்தரவிடக் கோரி, ஓபிஎஸ் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, கடந்த 29-ம் தேதி வழங்கிய தீர்ப்பின் எழுத்துப்பூர்வ நகல் வெளியாகியுள்ளது. அதில், அதிமுக பொதுக்குழு தொடர்பான அனைத்து மனுக்களையும் மீண்டும் விசாரித்து, உயர்நீதிமன்றம் உத்தரவுகளை வழங்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
பொதுக்குழு நடைபெற வேண்டுமா, கூடாதா என கடந்த 6-ம் தேதி உச்சநீதிமன்றம் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை எனவும், ஆனால் தங்கள் தீர்ப்பை உயர்நீதிமன்ற தனி நீதிபதி தவறாக புரிந்து கொண்டு உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாகவும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட அனைத்து மனுக்களையும், உயர்நீதிமன்றம் அடுத்த இரண்டு வாரங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.
வழக்கின் விசாரணை முடியும் வரை, எந்தவொரு புதிய முடிவையும் பொதுக்குழு எடுக்கக் கூடாது என, உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டு இருப்பதும் அந்த தீர்ப்பு நகலில் நினைவு கூறப்பட்டுள்ளது.
சுதந்திரமாக, சட்டவிதிகளுக்கு உட்பட்டு உயர்நீதிமன்றம் விசாரணையை நடத்தி, உத்தரவுகளை வழங்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.
முன்னதாக, பொதுக்குழுவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததால், அதனை மீற முடியாது என, ஜூலை 11-ம் தேதி அதிமுக பொதுக்குழுவிற்கு உயர்நீதிமன்ற தனி நீதிபதி அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.