உயிரே போனாலும் பாஜகவிடம் சரணடைய மாட்டேன் – சஞ்சய் ராவத் உறுதி

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்ரே தலைமையிலான சிவசேனா கட்சியில் பிளவு ஏற்பட்டு எம்எல்ஏக்கள் தனது ஆதரவை விளக்கிக்கொண்டால் மகாவிகாஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. சிவசேனாவைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் பாஜகவுடன் கூட்டணி வைத்து தற்போது முதலமைச்சராக ஆட்சி நடத்தி வருகிறார்.
பெரும்பாலான எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் ஆதரவு ஏக்நாத் ஷிண்டே தரப்பிடம் உள்ள நிலையில், கட்சியின் சில மூத்த தலைவர்கள் இன்னும் உத்தவ் தாக்ரே ஆதரவாளராக உள்ளனர். அதில் முதன்மையானவர் கட்சியின் செய்தித் தொடர்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ராவத். கட்சியின் குரலாக இருந்து ஊடக முகமாக இருக்கும் சஞ்சய் ராவத்திற்கு அமலாக்கத்துறை அழுத்தம் சில மாதங்களாக ஏற்பட்டுள்ளது.
மும்பையில் உள்ள அரசு குடியிருப்புகள் புணரமைப்பு செய்வதில் கோடிக் கணக்கான ரூபாய் மதிப்பில் பணமோசடி ஏற்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தனது விசாரணையில் கண்டறிந்து வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த ஊழல் புகாரில் சஞ்சய் ராவத்திற்கு முக்கிய பங்கு உண்டு என அமலாக்கத்துறை தரப்பு கூறி வருகிறது. தங்கள் முன் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சஞ்சய் ராவத்திற்கு அமலாக்கத்துறை கடந்த 1ஆம் தேதி சம்மன் அனுப்பியது. முதல் விசாரணைக்கு அவர் ஆஜரான நிலையில், அடுத்த விசாரணை ஜூலை 20ஆம் தேதி நடைபெறும் என சம்மன் வந்தது. இதற்கு சஞ்சய் ராவத் ஆஜராகவில்லை. தொடர்ந்து ஜூலை 27 ஆம் தேதி அடுத்த சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் இந்த சம்மனுக்கும் அவர் ஆஜராகவில்லை.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக விசாரிக்க மும்பையில் உள்ள சஞ்சய் ராவத்தின் இல்லத்திற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் நேரில் சென்று சோதனை மேற்கொண்டனர். அமலாக்கத்துறை அதிகாரிகளின் இந்த அதிரடி வருகை குறித்து கூறிய சஞ்சய் ராவத், இவர்கள் கூறும் மோசடி புகாருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் பாபாசாஹேப் தாக்ரே மீது உறுதியிட்டு இதை சொல்கிறேன். நான் சிவசேனாவுக்காக இறுதிவரை போராடுவேன். எந்த சூழலிலும் நான் கட்சியை விட்டு விலக மாட்டேன். எனது தலை கொய்யப்பட்டு இறந்தாலும் சரி பாஜகவிடம் சரணடைய மாட்டேன் என காட்டமாக தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சஞ்சய் ராவத் இல்லத்தில் சோதனை மேற்கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.