இளைஞர்களால் பெருமளவு கசிப்பு உற்பத்தி அழித்தொழிப்பு
இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை வட்டக்கச்சி 10 வீட்டுத்திட்டம் பகுதியில் குறித்த இளைஞர்களால் பெருமளவு கசிப்பு உற்பத்தி அழித்தொழிக்கப்பட்டது, குறித்த இளைஞர்களின் செயற்பாட்டை பிரதேச மக்கள் பாராட்டி வருகின்றனர்.
அண்மை நாட்களாக வட்டக்கச்சி பிரதேசத்தை சேர்ந்த 100க்கு மேற்பட்ட இளைஞர்கள் இவ்வாறு போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் சுயமாக களமிறங்கியுள்ளனர். பொலிசார், இராணுவ புலனாய்வு பிரிவு, விமானப்படையினரின் ஆதரவுடன் போதைப்பொருளற்ற வட்டக்கச்சி எனும் தொனிப்பொருளில் குறித்த சமூக வேலைத்திட்டத்தில் களமிறங்கியுள்ளமை பிரதேசத்தில் வரவேற்பை பெற்றுள்ளது.
குறித்த வேலைத்திட்டத்தின் கீழ் மது உற்பத்தி செய்யப்படும் பகுதிகளை முற்றுகையிட்டு பொலிசாரிடம் பாரமளித்தல், விற்பனை செய்யப்படும் பகுதிகளிற்கு கொள்வனவிற்காக வரும் மக்களை தடுத்தல் உள்ளிட்ட பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறுகிய கால வேலைத்திட்டத்தில் கணிசமான அளவு சட்டவிரோத கசிப்பு விற்பனை தடுக்கப்பட்டுள்ளதாக குறித்த சமூக பணியில் ஈடுபட்டுவரும் இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த வேலைத்திட்டத்தின் ஒன்றான கசிப்பு உற்பத்தியினை தடுக்கும் வகையில் இளைஞர்கள் சுற்றிவளைப்பொன்றை மேற்கொண்டு 420 லீட்டர் கோடா மற்றம் 10 லீட்டர் கசிப்பு ஆகியன மீட்கப்பட்டு பொலிசாரிடம் கையளிக்கப்பட்டது,
குறித்த இளைஞர்களின் செயற்பாட்டில் தொடர்ந்தும் மேலும் பல இளைஞர்கள் இணைந்து வருவதாகவும், பெண்கள் குறிப்பாக குடும்ப பெண்கள் ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் சமூக வேலைத்திட்டத்தில் ஈடுபட்டுவரும் இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை இச் செயற்பாட்டிற்கு தொடர்ந்தும் பொலிசாரும், முப்படையினரும், அரச அதிகாரிகளும், பொது மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையினையும் முன்வைக்கின்றனர்.