மிகச்சிறிய வயதில் உயர் பதவி; அங்கஜனின் நியமனம் குவியும் பாராட்டுக்கள்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கை சின்னத்தில் யாழ். மாவட்டத்தில் போட்டியிட்டு மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகளை பெற்றுக்கொண்ட அங்கஜன் இராம நாதனுக்கு பிரதி குழுக்களின் தலைவர் என்னும் உயரிய பதவி கிடைத்தமைக்காக யாழ். மாவட்டத்திலுள்ள பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், புத்திஜீவிகள், மதத் தலைவர்கள், கல்விச் சமூகத்தினர் என பலரும் தமது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றனர்.
பாராளுமன்றத்தின் வரலாற்றில் மிக சிறிய வயதில் நாட்டின் உச்ச சபையை வழிநடத்தக் கூடிய விதத்தில் அவருக்கு வழங்கப்பட்டுள்ள இந்த நியமனமானது இலங்கை வாழ் அனைத்து தமிழ் மக்களையும் கௌரவப்படுத்துவதாக அமைந்துள்ளது என்று பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் அல்லது இராஜாங்க அமைச்சர் என்பவற்றிற்கு இணையாக அவருக்கு வடக்கில் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் அபிவிருத்திக் குழுவின் தலைவராகவும் ஜனாதிபதியினால் நியமனம் வழங்கப்பட்டுள்ளது குறித்தும் யாழ். மாவட்ட மக்கள் தமது நன்றிகளை அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ளார்.
குழுக்களின் பிரதித் தலைவரான அங்கஜன் இராமநாதன், 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற வடமாகாண சபைக்கான தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட்டு 10,034 வாக்குகளைப் பெற்று மாகாண சபை உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.
2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக சுதந்திரக் கட்சி சார்பில் நியமிக்கப்பட்டார்.
2015 யாழ், கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு இணைத்தலைவராக நியமிக்கப்பட்டார். 2018 ஆம் ஆண்டு கமத்தொழில் பிரதியமைச்சராகப் பதவியேற்றார். தற்போது 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் அதிகூடிய விரும்புவாக்குகளைப் பெற்று (36,365) பாராளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.