ரத்கமவில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் உயிரிழப்பு : இருவர் வைத்தியசாலையில் (வீடியோ)
ரத்கம, கம்மத்தேகொட பிரதேசத்தில் நேற்று (31) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்து காலி, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ரத்கம, தெவெனிகொட, பன்சல வீதியைச் சேர்ந்த தேவ நந்தலால் பிரியந்த என்ற 45 வயதுடைய நபரே இந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக ரத்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவர் ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் என்பது பொலிஸ் விசாரணைகளின் போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலத்த காயமடைந்து காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் இருவரும் ரத்கம, கம்மத்தேகொட பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸாரின் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தடல்லகே ராஜகருணா (வயது 47) மற்றும் தடல்லகே எரங்க (வயது 26) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக ரத்கம பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகவும், அதற்கு டி-56 ரக துப்பாக்கியே பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதுவரை பொலிஸாரின் விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட இடத்தில் 10க்கும் மேற்பட்ட வெற்று ஷெல் உறைகளையும் ரத்கம பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்திய இருவர் தப்பிச் சென்றுள்ளதாக ரத்கம பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த மூவரையும் பிரதேசவாசிகள் காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன், ஒருவர் உயிரிழந்துள்ளதாக கராப்பிட்டிய வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் இருவரும் பலத்த பொலிஸ் பாதுகாப்பில் உள்ளதாக ரத்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ரத்கம பொலிஸ் அதிகாரிகள் குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.