பாகிஸ்தானில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 320 ஆக உயர்வு.
பாகிஸ்தானில் கடந்த 5 வாரங்களாக பெய்து வரும் தொடர் கனமழை மற்றும் திடீர் வெள்ளப் பெருக்கினால் அந்நாட்டின் பலுசிஸ்தான் மாகாணம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதுவரை அந்த மாகாணத்தில் மட்டும் 127 பேர் உயிரிழந்துள்ளனர். ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக நெடுஞ்சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்துள்ளன. அந்நாடு முழுவதும் போக்குவரத்து தடைபட்டுள்ளது.
பலுசிஸ்தானில் சுமார் 13,000 வீடுகள் வெள்ளத்தில் முழுமையாக முழ்கியுள்ளன. கராச்சி மற்றும் சிந்து மாகாணத்தில் மழை வெள்ளத்திற்கு 70 பேர் உயிரிழந்துள்ளனர். கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் 60 பேரும், பஞ்சாபில் 50 பேரும் உயிரிழந்துள்ளதாக பாகிஸ்தான் தேசிய மற்றும் மாகாண பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளை பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும் 10 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகுப்பு உள்பட அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.