100க்கு 151 மதிப்பெண் எடுத்த மாணவர்.. பீகார் பல்கலைக்கழக மார்க்ஷீட்டில் குளறுபடி

பீகார் மாநிலத்தில் பல்கலைக்கழக தேர்வு ஒன்றில் மாணவர் ஒருவர் 100க்கு 151 மதிப்பெண்கள் பெற்று அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் உள்ள லலித் நாராயண் மிதிலா பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு, பிஏ ஹானர்ஸ் படித்து வரும் மாணவர் ஒருவர் தேர்வில் பெற்ற மதிப்பெண் அனைவரையும் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது. இவர் பொலிட்டிகல் சயின்ஸ் பாட தேர்வில் 100க்கு 151 மதிப்பெண் பெற்றதாக முடிவுகள் வந்து மார்க் ஷீட்டில் அந்த மதிப்பெண்ணும் அச்சிடப்பட்டு வந்துள்ளது.
இதனால் ஷாக் ஆன மாணவர் பல்கலைக்கழக பதிவாளரை தொடர்பு கொண்டு குளறுபடியைத் தெரிவித்துள்ளார். தன் தரப்பு தவறை புரிந்து சுதாரித்துக் கொண்ட பல்கலைக்கழகம், இது அச்சுப்பிழையால் நேர்ந்த குளறுபடி என்றும் விரைவில் இது சரி செய்யப்பட்டு, சரியான மார்க் ஷீட் தரப்படும் எனவும் பதில் அளித்துள்ளது. இந்த மதிப்பெண் குளறுபடி இவருக்கு மட்டும் ஏற்படவில்லை, பல்கலைக்கழகத்தில் படிக்கும் மற்றொரு மாணவர் அக்கவுன்டிங் மற்றும் பைனான்ஸ் ஆகிய தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் தான் எடுத்ததாக மார்க் ஷீட்டில் அச்சடிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, அவர் பாஸ் செய்து விட்டதாகக் கூறி அடுத்த கிரேடுக்கும் பிரோமோட் செய்துள்ளது.
தனக்கு நேர்ந்த குளறுபடியால் இந்த மாணவரும் அதிர்ச்சி அடைந்து, பல்கலைக்கழகத்தை தொடர்பு கொண்டுள்ளார். விரைவில் தவறு திருத்தப்பட்டு, புதிய மார்க் ஷீட் தருகிறோம் என பல்கலைக்கழக தரப்பு தெரிவித்துள்ளது.
இந்த இரு சம்பவங்கள் குறித்து பல்கலைக்கழக பதிவாளர் முஸ்தாக் அகமது கூறுகையில்,’ இது அச்சுப் பிழையால் ஏற்பட்ட கோளாறு தானே ஒழிய, வேறு எந்த பிரச்னையும் இல்லை. தவறுகள் திருத்தப்பட்டு, இரு மாணவர்களுக்கும் விரைவில் புதிய மார்க் ஷீட் தரப்படும். எனவே, கவலை கொள்ள தேவையில்லை’ என்றார்.