68 வயதிலும் படிப்பில் தீரா ஆர்வம்.. பேரன் உதவியுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்று கல்லூரிக்கு தயாராகும் பாட்டி

கேரளா மாநிலத்தில் 68 வயதான மூதாட்டி ஒருவர் பட்டம் பெற வேண்டும் ஆர்வத்தில் இளங்கலை பட்டப்படிப்பு பயின்று வருகிறார். கேரளா மாநிலம் பத்தனம்திட்டா பகுதியைச் சேர்ந்த 68 வயது பெண்மணி விஜயகுமாரி. அங்குள்ள ஆலப்புழா மாவட்டம் முதுகுளம் பகுதியில் வசித்து வந்த இவர் தற்போது பத்தனம்திட்டாவிற்கு குடிபெயர்ந்துள்ளார்.
இவரின் பெற்றோரான வாசு தேவன் பிள்ளை, பார்கவி அம்மா ஆகியோரின் ஏழாவது குழந்தையான விஜயகுமாரி இளம் வயதில் 10ஆம் வகுப்பு முடித்த நிலையில், பின்னர் திருமணம் காரணமாக 11, 12ஆம் வகுப்பு படிக்க முடியாமல் போயிற்று. இவரது கணவர் முதுகுளத்தில் ட்ரைவிங் ஸ்கூல் நடத்தி வந்துள்ளார். காலங்கள் ஓடி விஜயகுமாரிக்கு குழந்தை பிறந்த பின்னர் அவர்களுக்கும் திருமணம் ஆகி அவர்களும் பிள்ளை பெற்று விட்டனர். தனது பேரப்பிள்ளைகளுடன் விஜயகுமாரி பொழுதை கழித்து வந்தாலும், அவர் மனதில் நம்மால் படிப்பை தொடர முடியவில்லையே என்ற கவலை ஓரமாக இருந்து வந்துள்ளது.
இதை ஒரு நாள் தனது பேரன் விவேக் பிரகாஷ் இடம் விஜயகுமாரி தெரிவித்துள்ளார். பாட்டியின் மன உணர்வை புரிந்து கொண்ட பேரன், வயதானவர்களும் பிளஸ் 2 படிக்கும் வசதி அங்குள்ள செங்கன்னுர் பப்ளிக் கல்வி நிறுவனத்தில் உள்ளது, அங்கு சேர்ந்து கொண்டு பிளஸ் 2 படித்து முடிக்கலாம் பாட்டி என யோசனை தெரிவித்துள்ளார். அத்தோடு நிற்காமல் பாட்டியின் சேர்க்கைக்கு அவரே நேரில் அலைந்து திரிந்து உதவியுள்ளார்.
அத்தோடு நிற்காமல் பாட்டி படிப்பதற்கு தேவையான உதவிகளை தொடர்ந்து புரிந்து வந்துள்ளார். பிளஸ் 2 தேர்வுக்காக ஐந்து பாடங்களை படித்து தேர்ச்சி பெற ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொண்ட விஜயகுமாரி, சில நேரங்களில் தேவைப்பட்டால் நள்ளிரவு முதல் விடியற்காலை 4 மணி வரை எல்லாம் படிப்பேன் என்கிறார். தனது விடாமுயற்சியால் ஆர்வத்துடன் பிளஸ் 2 தேர்வு எழுதி அதில் 60 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சியும் பெற்றுள்ளார் விஜயகுமாரி.
68 வயதான விஜய குமாரிக்கு பிளஸ் 2 படித்து முடித்தவுடன் நிறைவு வந்துவிடவில்லை. எப்படியாவது பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்று பட்டம் பெற்று விட வேண்டும் என அவா அவருக்கு உள்ளது. எனவே, அடுத்து ஹியூமானிடீஸ் படிப்பில் இளங்கலை பட்டம் பெற தன்னை தயார்ப்படுத்தி வருகிறார் விஜயகுமாரி.