சினிமா பைனான்சியர் அன்புசெழியன் வீட்டில் வருமானவரித் துறை சோதனை
சினிமா ஃபைனான்சியர் அன்புசெழியன் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 40 இடங்களில் இந்த சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதுரையைச் சேர்ந்த அன்புசெழியன் சினிமா பைனான்சியராக உள்ளார். மேலும், கோபுரம் சினிமாஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் அவர் நடத்தி வருகிறார். பல்வேறு படங்களுக்கு அன்புசெழியன் பைனானஸ் செய்துள்ளார். இந்நிலையில், அன்புசெழியனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அன்புச் செழியனுக்கு சொந்தமான இடங்கள் மட்டும் அவரது உறவினர்கள் இடங்கள் என மொத்தம் 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். இதில், சென்னையில் 10 இடங்களிலும் மதுரையில் 30 இடங்களிலும் சோதனை நடைபெறுகிறது. மதுரை காமராஜர் சாலையில் உள்ள அன்பு செழியன் இல்லத்தில் வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளது.
மதுரை மேலமாசி வீதியில் உள்ள அவருக்கு சொந்தமான அலுவலகம், கீறைத்துறை பகுதியில் உள்ள வீடு, செல்லூர் பகுதியில் உள்ள கோபுரம் திரையரங்கம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் உள்ள அன்புச்செழியன் வீட்டில் வருமானவரி துறை சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
பிகில் திரைப்படம் 300 கோடி ரூபாய் வசூல் ஈட்டியதாக வந்த தகவலின் அடிப்படையில் கடந்த 2020ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் சினிமா நிறுவனம், நடிகர் விஜய், பைனான்சியர் அன்புசெழியன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரிசோதனை நடத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், அப்போது அன்புசெழியனுக்கு சொந்தமான இடங்களில் இருந்து கட்டுக்கட்டாக பணம் கண்டெடுக்கப்பட்டது. ரூ.77 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்ததாகவும் வருமான வரித்துறை அறிக்கை வெளியிட்டது.