ராணிப்பேட்டை சாலை விபத்து: 3 குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
ராணிப்பேட்டை மாவட்டம் SR கண்டிகை அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் இரண்டு லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி: “நேற்று (1.8.2022) மாலை 5 மணியளவில், சோளிங்கர் – அரக்கோணம் சாலை, SR கண்டிகை மின்னலம்மாள் கோயில் எதிரே சாலையோரம் நின்றிருந்த புதூர் கண்டிகையைச் சேர்ந்த சீனிவாசன் ( 45) மற்றும் அங்கு சாலையில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த SR கண்டிகை கிராமத்தை சேர்ந்த உண்ணாமலை ( 45), கன்னியப்பன் ( 65) ஆகியோர் மீது அவ்வழியாக சென்ற கார் எதிர்பாராத விதமாக மோதியதில் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த விபத்தில் உயிரிழந்த மூவரின் குடும்பத்தினருக்கும் தலா ரூபாய் இரண்டு லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்” என்று அவர் கூறியுள்ளார்.