டி20-ல் ஒரே ஓவரில் 34 ரன்கள் விளாசிய ஜிம்பாப்வே வீரர் ரியான் பர்ல்!
டி20 கிரிக்கெட் போட்டியில் ஒரே ஓவரில் 34 ரன்களை விளாசி அசத்தியுள்ளார் ஜிம்பாப்வே அணியின் பேட்ஸ்மேன் ரியான் பர்ல் (Ryan Burl). வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் செமையாக பெட் செய்து கலக்கியுள்ளார் அவர்.
வங்கதேச கிரிக்கெட் அணி, ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த பயணத்தில் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் அடங்கும். இரு அணிகளும் தற்போது டி20 தொடரில் விளையாடி வருகின்றன.
இந்தத் தொடரின் மூன்றாவது டி20 போட்டி இன்று ஹராரே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட் செய்தது. அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய வங்கதேச அணி 146 ரன்கள் எடுத்து ஆட்டத்தை இழந்தது.
10 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது ஜிம்பாப்வே
.
அந்த அணியின் வெற்றிக்கு அடிப்படை காரணமாக அமைந்தது ரியான் சேர்த்த அந்த 54 ரன்கள்தான். 28 பந்துகளில் இந்த ரன்களை அவர் சேர்த்தார். முக்கியமாக வங்கதேச வீரர் நஸும் அகமது வீசிய 15-வைத்து ஓவரில் 34 ரன்களை விளாசி அசத்தினார். 6, 6, 6, 6, 4, 6 என ரன்களை சேர்த்தார் அவர்.
அந்த ஓவரில் ஆட்டம் அப்படியே ஜிம்பாப்வே வசம் திரும்பியது. ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர்கள் விளாசும் வாய்ப்பை நூலிழையில் நழுவிட்டார் ரியான். ஆட்ட நாயகன் விருதையும் அவரே வென்றார். 67 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய அணியை கரை சேர்த்தது அவரது ஆட்டம்தான்.