ஹெரோயின் நுகர முற்பட்டனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 4 மாணவர்களுக்கு பிணை
ஹெரோயின் போதைப்பொருளை நுகர முற்பட்டனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்களையும் பிணையில் விடுவித்து கிளிநொச்சி நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டார்.
கிளிநொச்சி பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில் கணித, உயிரியல் பிரிவுகளில் கல்வி பயிலும் நான்கு மாணவர்கள் நால்வர், கிளிநொச்சியிலுள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றின் வளாகத்தில் வைத்து பொலிஸாரால் நேற்றுக் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து தலா ஒரு முள்ளு (தீக்குச்சியின் அளவு) ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
நான்கு மாணவர்களிடமும் வாக்குமூலம் பெறப்பட்டது.
“எமது சக மாணவர் ஒருவர் நான்கு முள்ளு ஹெரோயின் போதைப்பொருளை கடந்த சில நாள்களுக்கு முன்பு எமக்கு வழங்கியிருந்தார். அவர் தற்போது வேறு பிரதேசத்துக்குச் சென்றுவிட்டார்.
நேற்றுச் சனிக்கிழமை தனியார் வகுப்பை முடித்துவிட்டு அந்த போதைப்பொருளை நுகர்ந்து கெத்துக் காட்டவேண்டும் என்று நினைத்தோம். அதனை சில மாணவர்களுக்குத் தெரிவித்துவிட்டு ஆரம்ப பாடசாலை ஒன்றின் மலசல கூடத்துக்குச் சென்றிருந்த போது, பொலிஸார் அங்கு வந்து கைது செய்தனர்” என்று மாணவர்கள் நால்வரும் வாக்குமூலமளித்தனர்.
இந்த நிலையில் மாணவர்கள் நான்கு பேரும் கிளிநொச்சி நீதிவான் முன்னிலையில் இன்று முற்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிவான், இன்று விடுமுறை நாள் என்பதால் மாணவர்களை தலா ஒரு லட்சம் ரூபாய் ஆள் பிணையில் விடுவித்து உத்தரவிட்டார்.
“கிளிநொச்சி கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைப்பொருள்களை பெருமளவில் பிடிக்கின்றோம். நேற்றுக் கூட 57 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் ஒருவரைக் கைது செய்தோம். எனினும் அவ்வாறான செய்திகள் ஊடகங்களில் வருவதில்லை.
ஆனால் மாணவர்கள் கைது விடயம் பெரிதாக வெளியிடப்பட்டுள்ளது. இது பழிவாங்கும் செயற்பாடாக உள்ளது என சந்தேகிக்கவேண்டி உள்ளது. கைது செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரும் கல்வியில் சிறந்து விளங்குபவர்கள்.
இந்தச் செய்தியை பெரிதாக வெளியிட்ட பத்திரிகையில் மாணவர்களில் ஒருவரின் தாயார் முன்னர் பணியாற்றியுள்ளார். எனவே இந்தப் பின்னணி பற்றி சந்தேகிக்கப்படுகிறது.
அத்தோடு மாணவர்களிடம் கெத்து காட்டவேண்டும் என்ற நோக்கம் இருப்பது விசாரணைகளில் வெளிப்பட்டது.
மாணவர்கள் இவ்வாறான பிழையான வழிகளுக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு பொலிஸார் அனுமதிக்கமாட்டார்” என்று பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.