காமன்வெல்த் விளையாட்டு விழாவிற்கு சென்ற இலங்கை வீராங்கனையும் அதிகாரியும் தலைமறைவு.
இங்கிலாந்தின் பேர்மிங்ஹாம் நகரில் நடைபெறும் பொதுநலவாய விளையாட்டு விழாவில் பங்குபற்றுவதற்காக சென்ற இலங்கைக் குழாமின் வீராங்கனை ஒருவரும்b சிரேஷ்ட அதிகாரி ஒருவரும் தலைமறைவாகியுள்ளனர்.
இது குறித்து பேர்மிங்ஹாம் மெட்ரோபொலிட்டன் பொலிஸார் விசாரணைகைள ஆரம்பித்துள்ளனர்.
திங்கட்கிழமை தனது முதல் சுற்று போட்டியில் தோல்வியுற்ற பின்னர் மேற்படி வீராங்கனை காணாமல் போயுள்ளார். அதன்பின் முகாமையாளரும் காணாமல் போயுள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது.
இவ்விடயம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இலங்கைக் குழாம் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இச்சம்பவத்தையடுத்து, இது போன்ற மேலும் சம்பவங்கள் நடைபெறுவதை தவிர்ப்பதற்காக இலங்கைக் குழாம் அங்கத்தவர்களின் கடவுச்சீட்டுகளை அவர்களிடமிருந்து இலங்கை குழாமின் பிரதான அதிகாரி மேஜர் ஜெனரல் தம்பத் பெர்னாண்டோ பெற்றுக்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
2022 பொதுநலவாய விளையாட்டு விழாவுக்காக இலங்கையிலிருந்து 110 போட்டியாளர்களும் 51 அதிகாரிகளும் பேர்மிங்ஹாம் சென்றுள்ளனர்.
இலங்கைக் குழாமிலுள்ள அனைவருக்கும் 180 நாட்களுக்கான பிரித்தானிய விசா வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.