ஐஐடி மாணவிக்கு பாலியல் தொல்லை.. கேண்டீன் ஊழியரான பீகார் வாலிபர் கைது
சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் வடமாநில இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை ஐஐடி வளாகத்தில் கடந்த 24ம் தேதி இரவில் மாணவி ஒருவர் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது, மர்ம நபர் ஒருவர் எதிர் திசையில் சைக்கிளில் வந்து வேண்டும் என்றே மாணவி வந்த கைக்கிள் மோதியுள்ளார். மேலும், மாணவிக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து மாணவி கடந்த 26ம் தேதி ஐஐடி முதல்வரிடம் நேரிலும் மற்றும் மின் அஞ்சல் மூலம் புகார் அளித்தார்,
அதனடிப்படையில் ஐஐடி வளாகத்தில் பணிபுரியும் 300 பேரின் புகைப்படங்களை பாதிக்கப்பட்ட பெண்ணிடம் காட்டி கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்திய நிலையில் குற்றவாளியை அடையாளம் காணமுடியவில்லை. இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி கோட்டூர்புரம் உதவி கமிஷனர் தலைமையில் குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள், கட்டிட பணிகளில் ஈடுபட்டுள்ள 300 வடமாநில தொழிலாளர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.அதில் ஜூஸ் கடை நடத்திவரும் பீகாரை சேர்ந்த சந்தன்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டம் உள்பட 2 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.