நேரு உள்விளையாட்டு அரங்கில் துப்பாக்கியால் சுட்டு காவலர் தற்கொலை! சென்னையில் பரபரப்பு
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ஆயுதப்படை காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் முதல் முறையாக நடந்து வருகின்றன. ஆகத்து 10ஆம் திகதியுடன் இந்தப் போட்டிகள் நிறைவடைகின்றன.
நிறைவு விழா நிகழ்ச்சிக்காக நேரு உள்விளையாட்டு அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் ஒருவர், தன்னைத் தானே தலையில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்த நிலையில், ரத்த வெள்ளத்தில் கிடந்த காவலரின் உடல் ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
ஆயுதப்படை காவலரான செந்தில் குமார் என்பவரே உயிரிழந்த நபர் என்பதும், அவர் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
செந்தில்குமாருக்கு திருமணமாகி மனைவி மற்றும் பெண் குழந்தை உள்ள நிலையில், குடும்பப் பிரச்சனை காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
எனினும் பொலிசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தமிழகத்தில் முதல்முறையாக பிரம்மாண்டமான முறையில் நடைபெறுவது சர்வதேச நாடுகளை உற்றுநோக்க வைத்துள்ளது.
இந்த சமயத்தில் நிறைவு விழா நிகழ்ச்சி ஏற்பாட்டில் காவலர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.