ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மரியாதை வேட்டுக்கள் தீர்த்தல், வாகனத் தொடரணி இல்லாத எளிமையான வைபவம் ஜனாதிபதிக்கு முப்படையினரின் அணிவகுப்பு மரியாதை…
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (03) வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய இந்த நிகழ்வு எளிமையாக இடம்பெற்றதுடன், மரியாதை வேட்டுக்கள் தீர்த்தல் மற்றும் வாகனத் தொடரணி இடம்பெறவில்லை.
இன்று மு.ப. 09.50க்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்களின் வருகை இடம்பெற்றது. அதனை அடுத்து பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களின் வருகை இடம்பெற்றதுடன், அதனைத்தொடர்ந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் வருகை இடம்பெற்றது.
இதன்போது, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க ஆகியோரால் நாடாளுமன்ற கட்டடத்தின் பிரதான நுழைவாயிலின் படிக்கட்டுக்கு அருகில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வரவேற்றனர்.
இங்கு முப்படையினரால் ஜனாதிபதிக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்தபட்டது. அதனை அடுத்து படைக்கலசேவிதர், பிரதி படைக்கல சேவிதர் மற்றும் உதவி படைக்கல சேவிதர் ஆகியோர் முன்செல்ல சபாநாயகர், நாடாளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோரினால் ஜனாதிபதி நாடாளுமன்றக் கட்டடத்துக்குள் அழைத்துச் செல்லப்பட்டார்.
இதன்போது நாடாளுமன்றத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகே கொழும்பு தேவிபாலிகா வித்தியாலய மாணவியர் ஜயமங்கல கீதம் இசைத்தனர்.
இதன் பின்னர் உடையணி அறைக்கு வருகைதந்த ஜனாதிபதி அவர்கள் மு.ப 10.25 மணிவரை அங்கிருந்து, அதனைத் தொடர்ந்து செங்கோலைக் கையில் தாங்கியவாறு படைக்கல சேவிதர் உள்ளிட்டவர்களுடன் சபா மண்டபத்துக்குள் வருகை தந்தார். அதனைத்தொடர்ந்து மு.ப. 10.30 அளவில் ஜனாதிபதி அக்கிராசனத்தை ஏற்று அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைத்தார். இம்முறை ஜனாதிபதியின் ஆசனத்தில் ஜனாதிபதியுடைய இலட்சினைக்குப் பதிலாக அரசாங்கத்தின் இலட்சினை பொருத்தப்பட்டிருந்தது விசேட அம்சமாகும். ஜனாதிபதி அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைத்ததை அடுத்து நாடாளுமன்றம் எதிர்வரும் ஆகஸ்ட் 09 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
அதனை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அழைக்கப்பட்ட விருந்தினர்களுக்கு தேநீர் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஜனாதிபதி மற்றும் முதற்பெண்மணி ஆகியோர் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறும்போதும் இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரை வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கும் நிகழ்வில் வெளிநாட்டு இராஜதந்திரிகள், பிரதம நீதியரசர், உயர்நீதிமன்ற நீதிபதிகள், சட்டமா அதிபர், பாதுகாப்புச் செயலாளர், முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட விசேட விருந்தினர்கள் வருகை தந்திருந்தனர்.