ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை.
பாராளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை நம்பிக்கையினைப் பெற்றுக்கொண்ட நபர் என்ற வகையில் நான் கடந்த 20 ஆம் திகதி சனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டேன். இன்றைய தினத்திலே சனாதிபதியாக நான் முதல் முறையாக உரையாற்றுகின்றேன்.
இச்சபையினை இலங்கையின் பல்வேறு இனத்தைச் சேர்ந்தவர்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனர். சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள், பறஙகியர்; மற்றும் ஏனைய இனத்தவர்கள் ஆகிய யாராக இருந்தாலும் நீங்கள் இந்த இடத்திலே இலங்கைப் பாராளுமன்றம் என்ற ரீதியிலேயே ஒன்றுகூடுகின்றீர்கள்.
எமது நாட்டிலே வாழுகின்ற மக்களும் பல்வேறு இனங்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்றனர். அவ்வாறு எந்த இனத்தைப் பிரதிநிதித்துவம் செய்தாலும் நாம் அனைவரும் இலங்கையர்கள் என்ற ரீதியிலேயே செயற்படுகின்றோம்.
நான் இன்று உங்கள் முன் அனைத்து இலங்கையர்களினதும் சனாதிபதியாகவே உரையாற்றுகின்றேன்.
எமது நாடு பல்வேறு கலாசாரங்களை கொண்டுள்ள, பல்வேறு சமயங்களை பின்பற்றுகின்ற, பல்வேறு மொழிகளை பேசுகின்ற மக்களை கொண்டுள்ளது. கலாசார விழுமியங்களை பேணி வருவதற்கும், சமயங்களை பின்பற்றுவதற்கும் மற்றும் தமது தாய் மொழியை பயன்படுத்துவதற்கும் அனைவருக்குமுள்ள உரிமையை உங்கள் சனாதிபதி என்ற வகையில் நான் பாதுகாப்பேன்.
அவ்வாறே அரசியலமைப்பின் பிரகாரம் பௌத்த சமயத்துக்கு முன்னுரிமையளித்து, பௌத்த சமயத்தைப் பேணிப் பாதுகாத்து வளர்ப்பதற்கும,; அனைத்து சமயங்களினதும் உரிமைகளை பாதுகாப்பதற்கும் நான் கடமைப்பட்டுள்ளேன்.
எமக்கு சமய, கலாசார, சமூக ரீதியான மாத்திரமன்றி, பொருளாதார ரீதியாகவும் சிறந்ததொரு பாரம்பரியம் உரித்தாக உள்ளது. அது பல்வேறு கலாசாரங்களினால் வளர்ந்துள்ளது. நான்குவரம் கடவுள்கள் பற்றிய எண்ணகருவானது அவ்வாறே பௌத்த சமயத்துடன் தொடர்புபடுகின்றது. இவ்வாறான பாரம்பரிய மரபுரிமைகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தைக் கட்டியெழுப்பும் பொறுப்பு இன்று எம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நான் கஷ்டத்தில் விழுந்திருந்த ஒரு நாட்டையே பொறுப்பேற்றேன். கடுமையான பொருளாதாரப்; பிரச்சினை ஒருபுறம். பாரிய மக்கள் எதிர்ப்பு மறுபுறம். எனினும் நாட்டுக்காக இந்த கடினமான சவாலை பொறுப்பேற்க நான் தீர்மானித்தேன். அதற்குக் காரணம் இருளுக்கு சாபமிட்டுகொண்டு இருப்பதை விட ஒரு விளக்கினையேனும் ஏற்றுவது நாட்டிற்காக நான் செய்யும் கடமை என நான் கருதியமையாகும்.
நாம் இன்று நவீன வரலாற்றிலே ஒருபோதும் எமது நாடு முகம்கொடுத்திராத கடுமையான பிரச்சினையொன்றுக்கு முகம்கொடுத்துள்ளோம். நாம் பாரிய அனர்த்தத்திற்கு உள்ளாகியுள்ளோம். அதிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு நாம் அனைவரும் ஒன்றிணையும் சவாலை வெற்றிகொண்டால் மாத்திரமே முடியும். இந்த பாராளுமன்றத்தில் இருக்கும் கௌரவ உறுப்பினர்களும் அவ்வாறே நாட்டு மக்கள் அனைவரும் நாட்டினைக் கட்டியெழுப்பும் முயற்சிக்கு தத்தமது சக்திக்கு உட்பட்டவாறு பங்களிப்புச் செலுத்துவது மிகவும் இன்றியமையாததாகும்.
நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக பாராளுமன்றத்தில் அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும் என்பதே இச்சந்தர்ப்பத்தில் பெரும்பாலான நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாகும். ஒன்றிணையும் பட்சத்தில் எம்மால் நாட்டினைக் கட்டியெழுப்ப முடியும். பிரிந்து சென்றால் இப்பாராளுமன்றத்தில் இருக்கும் மக்கள் பிரதிநிதிகள் மாத்திரமன்றி முழு நாட்டு மக்களும் துன்பத்திற்கும் அழிவிற்கும் ஆளாகுவர்.
எனவே சர்வகட்சி அரசாங்கம் ஒன்றினை அமைப்பதற்காக ஒன்றிணையுமாறு நான் மீண்டும் இந்த பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்துத் தரப்பினரிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன். நாம் உங்கள் அனைவருக்கும் நட்பின் கரத்தை கௌரவத்துடன் நீட்ட விரும்புகின்றேன். கடந்த காலத்தினை பின்தள்ளிவிட்டு நாட்டினைக் கட்டியெழுப்புவதற்காக ஒன்றிணையுமாறு நம்பிக்கையுடன் அழைப்பு விடுக்கின்றேன். சர்வகட்சி அரசாங்கம் பற்றி அரசியல் கட்சிகளுடன் நடாத்தும் பேச்சுவார்த்தையினை நான் ஏற்கனவே ஆரம்பித்துள்ளேன்.
எனது வேலைத்திட்டத்தை ஆராய்ந்து, அதன் பின்னர் சர்வகட்சி அரசாங்கம் ஒன்றினை அமைப்பதற்கு இணக்கப்பாட்டினைத் தெரிவிப்பதாக சில தரப்பினர் தெரிவித்திருந்தனர். அது பற்றியும் இங்கு கருத்துக்கூற விரும்புகிறேன். சர்வகட்சி அரசாங்கம் என்பது ஒரு கட்சியின் தனி விருப்பத்திற்கேற்ப செயற்படுகின்ற அரசாங்கமொன்றல்ல. அது பொது கொள்கை வட்டத்தினுள் அனைத்துத் தரப்பினரதும் கருத்துக்களின் பிரகாரம் பயணிக்கும் அரசாங்கமொன்றாகும். நம் அனைவரினதும் கருத்துக்களின் பிரகாரம் செயற்படும் அரசாங்கமொன்று. நாட்டிற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னெடுத்துச் செல்லுகின்ற ஒரு அரசாங்கமாகும்.
விரைவில் இந்த அரசியல் நெருக்கடியினைத் தீர்த்துக்கொண்டு ஸ்திரத்தன்மை ஒன்றினை ஏற்படுத்திக்கொள்வதற்காக சர்வகட்சி அரசாங்கம் ஒன்றின் முக்கியத்துவம் பற்றி நான் இச்சபைக்கு மீண்டும் மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றேன்.
பொருளாதாரம் சரிந்து விழுந்ததினால் எமது நாடு பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளப்பட்டது. இவ்வாறு எமது பொருளாதாரம் ஏன் சரிந்து விழுந்தது.
எமது பொருளாதார முறைமைகள் எவ்வாறு அமைய வேண்டுமென்பது பற்றி நாம் இன்று மூன்று நான்கு தசாப்தங்களாக விவாதித்து வருகின்றோம். 1977 ஆம் ஆண்டு எமது நாட்டிற்கு புதிய பொருளாதார முறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும் காலத்திற்கு பொருந்தக் கூடியவாறு அதனை எம்மால் நவீனமயப்படுத்த முடியவில்லை. பொருளாதாரத்தை நவீனமயப்படுத்துவதற்கு கவனம் செலுத்தாது போட்டித்தன்மை, தூரநோக்கற்ற அழிவுமிக்க குறுகிய அரசியலில் நாம் ஈடுபட்டோம். யுக்ரேன் யுத்தம் மற்றும் கோவிட் தொற்று என்பன காரணமாக உலகின் பிரதான பொருளாதாரங்கள் சரிந்து விழுதல் உள்ளிட்ட சர்வதேசத்தில் இடம்பெற்ற அனுகூலமான பொருளாதாரக் காரணிகள் எமது நெருக்கடியை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்கியது.
இந்த அனைத்து காரணிகளினாலும் எமது நாடு மிகவும் பாதாளத்திற்குத் தள்ளப்பட்டது. மக்கள் பெரும் கஷ்டங்களுக்கு ஆளாகினர். தற்போது நாம் விழுந்த இடத்திலிருந்து மீண்டெழுவதற்கான முயற்சியினை ஆரம்பித்துள்ளோம்.
தற்போதுள்ள மின் வெட்டினை குறைத்துக்கொள்ள எம்மால் முடிந்துள்ளது. பயிர்செய்கைக்காக எதிர்காலத்தில் தேவைப்படும் உரத்தைக் கொண்டுவருவதற்கான பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. சமையல் எரிவாயு பிரச்சினை தற்போது முழுமையாக தீர்க்கப்பட்டுவரும் நிலையில் உள்ளது. வரிசையில் காத்திருக்காது சமையல் எரிவாயுவை இன்னும் சில தினங்களில் அனைவராலும் பெற்றுக்கொள்ள முடியும். உணவுத் தட்டுபாடொன்று ஏற்படாதவாறு அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மருத்துவமனைகளுக்குத் தேவையான மருந்து வகைகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் என்பவற்றினைக் கொள்வனவு செய்யும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கைத்தொழில்கள் மற்றும் ஏற்றுமதித் துறை என்பவற்றிற்கு ஏற்பட்டுள்ள தடைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
மீளெழும் முயற்சியிலே எமது அயல் நாடான இந்தியா வழங்கிய ஒத்துழைப்பு தொடர்பாக நான் விசேடமாக இங்கு குறிப்பிட விரும்புகின்றேன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான இந்திய அரசாங்கம் எமக்கு வழங்கிய உயிர் மூச்சுக்கு நான் இலங்கை மக்கள் சார்பாக மோதி பிரதமர் அவர்களுக்கும், இந்திய அரசாங்கத்திற்கும், இந்திய மக்களுக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.
தற்போது எமது முன்னால் உள்ள குறுங்கால பிரச்சினை அமைவது எரிபொருள் தட்டுப்பாடாகும். எரிபொருளை கொண்டு வருவதற்காக ஏனைய நாடுகளிடமிருந்து கடன் உதவிகள் கிடைக்கும் வரையில் காத்திருக்கும் முறைமையிலே நாம் முடிவுக்கு கொண்டு வருதல் வேண்டும் எனவே எமது நாட்டின் ஏற்றுமதி வருமானம் மற்றும் வெளிநாட்டு நாணயமாற்று ஊடாக எரிபொருளை கொண்டு வருவதற்கான முறைமை ஒன்றினை நாம் ஆரம்பிக்க உள்ளோம். இதன் போது எரிபொருளுக்கான கொடுப்பனவினை சமப்படுத்திக்கொள்வதற்காக தேர்ந்தெடு இறக்குமதிகளை வரையறுத்துக்கொள்ள வேண்டியும் எமக்கு ஏற்படும.; மறுபுறமாக எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டியும் ஏற்படும். எனவே இந்த ஆண்டின் இறுதி வரையில் இந்த கஷ்டத்தினை நாட்டுக்காக நாம் தாங்கிக்கொள்ளல் வேண்டும்.
பொருளாதார நெருக்கடி காரணமாக நாம் அனைவரும் பல்வேறுபட்ட இன்னல்களுக்கு முகம்கொடுத்து வருகின்றோம்;, துன்பப்படுகின்றோம், கஷ்டப்படுகினறோம்;, சிக்கல்களுக்கு ஆளாகின்றோம். இவ்வாறான கஷ்டங்கள் மற்றும் துன்பங்கள் என்பவற்றிலிருந்து விடுபடுவதற்கான பாதையை நோக்கி இந்நாட்டினைக் கொண்டுசெல்வதற்கு உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்புடன் நான் நடவடிக்கை எடுப்பேன்.
இந்த கஷ்டங்களிலிருந்து மீழுவதற்குநாம் நீண்ட கால தீர்வுகளை நோக்கிப் பயணித்தல் வேண்டும். மீண்டும் ஒருபோதும் எமது நாட்டிலே இவ்வாறான பொருளாதார நெருக்கடியொன்று எமது நாட்டிலே ஏற்படாதவாறு பலமிக்க அடித்தாளமொன்றினை இடுதல் வேண்டும். பொருளாதாரத்தை நவீனமயப்படுத்துதல் வேண்டும். பொருளாதார ஸ்திரத்தன்மையினை ஏற்படுத்தி, போட்டித்தன்மைமிக்க சந்தைப் பொருளாதாரம் ஒன்றின் பக்கம் மாற்றியமைத்தல் வேண்டும். அவற்றிற்குத் தேவையான அறிக்கைகள், திட்டமிடல், சட்டதிட்டங்கள், ஒழுங்கு விதிகள் மற்றும் நிகழ்ச்சித் திட்டங்கள் என்பவற்றினை தற்போது நாம் தயாரித்து வருகின்றோம்.
நான் இன்று உங்கள் முன்னிலையில் தெளிவுபடுத்துவது எங்கள் எதிர்காலத்துக்கு அடிப்படையாகும் திட்டமிடல் சட்டகமாகும். இச்சட்டகத்தினுள் நாம் நடைமுறைப்படுத்தும் செயல்திட்டங்கள் என்பவை தொடர்பான விபரமான தகவல்கள் எதிர்காலத்தில் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும் இடைக்கால வரவுசெலவு மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தினூடாக முன்வைக்கப்படும்.
மீளெழுச்சிபெறும் ஆரம்பக் கட்டமொன்றாக நாம் சர்வதேச நிதியத்தோடு நான்கு வருட வேலைத் திட்டமொன்று தொடர்பான கலந்துரையாடல்களை ஆரம்பித்தோம். ஆகஸ்ட் மாதத்திலிருந்து நாம் அந்த கலந்துரையாடல்களை மீணடும் முன்னெடுத்துச் செல்வோம். ஆரம்ப கட்ட உயர்மட்டத்திலான கலந்துரையாடல்களைச் துரிதமாகவும் சிறப்பான முறையிலும் முடிப்பது எமது எதிர்பார்ப்பாகும்.
சர்வதேச நிதியம் மற்றும் சட்ட நிபுணர்களான லசாட் மற்றும் கிளிபட் சான்ஸ் நிறுவனங்களோடு சேர்ந்து கடன் நிலைபடுத்தும் திட்டம் தற்போது முடியுறும் தறுவாய்க்கு வந்துள்ளது. இந்தத் திட்டத்தை இன்னும் சில தினங்களில் நாம் சர்வதேச நிதியத்திடம் முன்;;;;;வைப்போம். அதன்பின்பு எமக்கு கடன் உதவிகள் வழங்கியுள்ள நாடுகளோடு கலந்துரையாடுவோம். அதன்பின்பு தனியார் கடனாளிகளோடும் கலந்துரையாடல்களை ஆரம்பிப்போம். அவர்களோடு உடன்பாட்டுக்கு வருவோம்.
இறுதியாக ஏற்றுமதிப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்குத் தேவையான கொள்கைகள் மற்றும் சட்டங்கள் மற்றும் நிகழ்ச்சித் திட்டங்களை வகுப்போம். எமது கடந்த கால பொருளாதார உரிமை வெளிநாட்டு வர்த்தகமாகும். கடந்தகாலத்தில் இலங்கையை கடல் பட்டுப்பாதையில் அமைந்த பிரதான பொருளாதாரக் கேந்திர நிலையமொன்றாக இனங்கண்டிருந்தார்கள். இலங்கை ஒரு காலத்தில் கீழைத்தேய தானிய களஞ்சியமொன்றாக அறிமுகமானது அதனால்தான். முழு வலயத்திலும் இருந்த அரிசியை உலகம் பூராகவும் பகிர்ந்தளிக்கும் மத்திய நிலயமாக இலங்;கை இருந்தது.
அந்தக் கடந்தகால உரிமைகளை மீண்டும் நிலைநாட்டுவதன்மூலம் வலுவான மற்றும் அபிவிருத்தியான பசுமை பொருளாதாரமொன்றை உருவாக்குவதே எமது இறுதி இலக்காக இருந்தது. காலநிலை மாற்றங்கள் எதிர்கால உலகம் முகம்கொடுக்கும் பாரிய பிரச்சினையொன்று என்பதை இனங்கண்டுள்ளோம். காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ளக்கூடிய வலுவான பொருளாதாரமொன்றை நாம் உருவாக்குதல் வேண்டும். மகா பராக்கிரமபாகு அரசர் கூறியதுபோல வானத்திலிருந்து விழும் ஒரு துளி நீரைக்கூட வீணாகப்போகாமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இன்று நாம் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியின் பிரதிபலனாக இருப்போர் இல்லாதோர் இடைவெளி விரிவடைந்துகொண்டு செல்கின்றது. நடுத்தர வகுப்பினர் சுருங்கிச் செல்கின்றார்கள். இன்னுமொரு பக்கத்தில் தொழில்முயற்சிகள் மற்றும் கைத்தொழில்கள் பாரிய சவால்களுக்கு முகம் கொடுக்கின்றது. தொழில்கள் இல்லாது போகின்றது.
கடந்த காலத்தில் வெளிநாட்டு ஊழியர்கள் இலங்கைக்கு அனுப்பும் நிதியின் அளவு குறைந்துவிட்டது. அதற்குப் பல காரணங்கள் உள்ளது. கொவிட் தொற்றுப்பரவல் காரணமாகப் பல தொழில்கள் இல்லாது போனது. தொழில்களுக்காக வெளிநாடு செல்வோர் குறைந்துள்ளனர். ரூபாயின் பெறுமதியைச் செயற்கையாகக் கட்டுப்படுத்தியதன் காரணமாக வேறு முறைகளின்மூலம் இலங்கைக்கு பணம் அனுப்புதல் மிகவும் இலாபகரமானதாக இருந்தது. தற்போது படிப்படியாக இந்நிலைமை மாற்றமடைந்து வருகின்றது. வங்கி முறைமையினூடாக இலங்கைக்குப் பணம் அனுப்புதலை ஊக்குவிப்பதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம்.
சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வருவது ஆகஸ்ட் மாதத்திலிருந்தாகும். இச்சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் வருவித்துக்கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
நாம் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துகின்றோம். அரச உரிமைப்பத்திரதாரிகளுக்கு அறுதி உறுதிப் பத்திரம் வழங்குவோம். அரச மாடிவீடுகளில் வசிப்போருக்கு வீட்டு உரிமைகளை வழங்குவோம். தோட்டத்துறையில் வாழும் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவோம்.
பொருளாதாரத்தை நிலைபேறுடையதாக்கும் முயற்சியின்போது சமூகத்தின் வலுவற்ற மற்றும் நிர்க்கதியானோர் தொடர்பில் மிகுந்த கவனம் செலுத்துவோம். நாட்டின் தொழில்முயற்சியாளர்களுக்கு தங்களது ஆற்றல்களினூடாக முன்வருவதற்குத் தேவையான வழிகளை மேலும் விரிவுபடுத்துவதோடு சமூகத்தில் கீழ்மட்டத்தில் வசிக்கும் மக்களின் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கு நடவடிக்கை எடுப்போம். நாடுபூராகவும் வசிக்கும் ஏழை மக்களுக்கு குறுகியகால நிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்போம். அதேபோன்று அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு நீண்டகால வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவோம். நான் சமூக மாற்றங்களுக்காக அர்ப்பணிப்போடு செயற்படுவேன்.
நான் எதிர்காலத்திற்காக மேற்கொள்ள வேண்டிய நேர்மறையான சமூக மாற்றங்களுக்காக அர்ப்பணிப்பேன். மீண்டும் விரிவான நடுத்தர வர்க்கத்தினரை உருவாக்குவதற்குத் தேவையான அடிப்படையை உருவாக்குவேன். சமூக சந்தைப் பொருளாதாரம் ஒன்றின் ஊடாக நன்மைகள் முழு சமூகத்திற்கும் நியாயமானவாறு பெற்றுக்கொடுப்பேன்.
இக்குறிக்கோள்களை ஈடேற்றும் செயற்பாடுகளுக்காகச் சமூக நியாயாதிக்க ஆணைக்குழுவொன்றைத் தாபிப்பதற்கு நான் நடவடிக்கை எடுப்பேன்.
இற்றைக்கு நான்கு அல்லது ஐந்து தசாப்தங்களுக்கு முன்னர் அரச தொழில்முயற்சிகள் தொடர்பில் பொருளாதார எண்ணக்கருவொன்று இருந்தது. ஆனாலும் அது தோல்வியான மற்றும் வினைத்திறனற்றதென்பதை தற்போது முழு உலகமும் ஏற்றுக்கொண்டுள்ளது. சோசலிச நாடுகளான சீனா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளும் தற்போது அரச தொழில்முயற்சிகளை செயற்படுத்துவதில்லை. நாம் மேலும் பண்டைய எண்ணக்கருக்களில் தங்கிநின்றால் எமது நாடு மேலும் கீழ்நோக்கிச் செல்வதைத் தடுப்பதற்கு யாருக்கும் முடியாமல் போகும். ஆகையினால் இவ்வாறு நட்டமடையும் அரச முயற்சிகளை முன்னெடுத்துச் செல்வது எவ்வாறு என்பதுபற்றி எமக்கு கொள்கைரீதியான தீர்மானங்களை எடுக்கவேண்டிவரும்.
இற்றைவரை உலகத்தில் பொருளாதார வல்லமைகொண்ட நாடுகளாக மேற்குலக நாடுகளே இருந்தன. ஆனாலும் 21 ஆம் நூற்றாண்டு முடிவடைவதற்கு முன்னதாக உலகத்தில் வலுவான பொருளாதாரம் இந்து சமுத்திரப் பிராந்தியத்துக்கு உரித்தாகும். அவ்வாறான பின்புலத்தில் எமது நாட்டின் புவிசார் அமைவு மிகவும் முக்கியமானதாகும். நாம் இந்த இலாபகரமான அமைவின் உச்சப் பயனை பெற்றுக்கொள்ள வேண்டும். இதனை மனதில் நிறுத்திக்கொண்டு எமது எதிர்கால நிறுவன சட்டங்கள் மற்றும் கொள்கைகளை வகுத்தல் வேண்டும். தினந்தோறும் கடன் பெற்றுக்கொள்வதன்மூலம் நாட்டை முன்கொண்டுச் செல்ல எம்மால் முடியாது. கடன் எடுப்பதை இயன்ற அளவு குறைத்துக்கொள்வதற்கு நாம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும். ஆகையினால் இந்து சமுத்திர கேந்திரீய புதிய பொருளாதார வலுவினால் எமது நாட்டுக்கு உச்சபட்ச பயனை பெற்றுக்கொள்ளக்கூடிய சட்டதிட்டங்கள் மற்றும் கொள்கைகளை நான் உங்களோடு சேர்ந்து வகுப்பேன்.
இலங்கை தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காகப் பாடுபடும்போது சம்பிரதாய சிந்தனையிலிருந்து விடுபடுமாறு நான் சகல தரப்பினரிடமும் கேட்டுக்கொள்கின்றேன். வெறுமனே அதிக வட்டிக்கு வர்த்தகக் கடன்களைப் பெற்றுக்கொள்ளும்போது அமைதியாகப் பார்த்திருந்த சில குழுக்கள் நாட்டுக்கு பொருத்தமான முதலீடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். பொய்யான பலிக்கடாக்களை உருவாக்கி மக்களை திசைதிருப்புகின்றார்கள்.
யாரேனும் சொல்வதை ஆராய்ந்து பார்;க்காமல் ஏற்றுக்கொண்டு வெளிநாட்டு முதலீடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதனால் எமது நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பை அளவிட முடியாது. ஊழல் மற்றும் மோசடி ஊடாக நாட்டின் நிதி மற்றும் வளங்களைக் களவாடியதனால் நாட்டுக்கு ஏற்பட்ட இழப்புகள்பற்றி மக்கள் அறிவார்கள். ஆனாலும் பொய் பலிக்கடாக்களை எடுத்துக்காட்டி வெளிநாட்டு முதலீடுகளைத் தடைசெய்து நாட்டுக்கு ஏற்படுத்திய இழப்பு கணக்கிட முடியாத அளவுக்கு விசாலமானதாகும்.
நான் உதாரணங்கள் பலவற்றை எடுத்துக் காட்டுகின்றேன்.
இந்தியாவோடு ஒன்றிணைந்து திருகோணமலை எண்ணெய்த்தாங்கித் தொகுதியினை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கும்போது இந்தியாவுக்கு இலங்கையை விற்கின்றார்கள் என்று கூறி அபிவிருத்தித் திட்டத்துக்கு இடையூறு விளைவித்தனர். அன்று எமக்கு எண்ணெய்த்தாங்கித் தொகுதியினை அபிவிருத்தி செய்துகொள்வதற்குச் சந்தர்ப்பம் கிடைத்திருப்பின் இன்று மக்களுக்கு எரிபொருள் வரிசைகளில் நீண்டநாட்கள் அலைவதற்கு அவசியம் ஏற்பட்டிருக்காது.
சுவசெரிய நோய் காவு வண்டிகளின் சேவையை ஆரம்பிக்கும்போது அதேபோன்று எதிர்ப்புகளைச் செய்தார்கள். சுவசெரிய நோய் காவு வண்டிகள் வைத்தியசாலைகளுக்கு வந்தால் ஏற்படுவது மரணம் எனக்கூறி சில வைத்தியர்கள் ஊடகக் கலந்துரையாடல்கள் நடத்தினார்கள். ஆனாலும் நாம் எவ்வாறாயினும் சுவசெரியவை ஆரம்பித்ததனால் தற்போது பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக மக்களை வழிதவறி நடத்தி தடைசெய்த கருத்திட்டங்கள் காரணமாக எமது பொருளாதாரக் கட்டமைப்பு அழிவடைந்தது.
இலகு புகையிரதச் சேவையைத் தாபிப்பதற்கும், துறைமுகத்தை மேம்படுத்துவதற்கும் ஜப்பான் நாடு முன்வந்த சந்தர்ப்பத்தில் அதற்கெதிராக அடிப்படையற்ற வீணான காரணிகள் பலவற்றை எடுத்துக்காட்டியதன் காரணமாக எமது நாட்டுக்குக் கிடைப்பதற்கிருந்த 3 பில்லியன் டொலருக்கு அதிகமான அளவு கிடைக்காமல் போயிற்று. அதுமட்டுமன்றி ஜப்பான் மற்றும் இலங்கைக்கிடையே இருந்த நீண்டகால நட்பு சிதறிப்போனது.
இக்கருத்திட்டங்களை எமக்குப் பெற்றுத்தருவதற்கு தலைமை தாங்கியவர் இலங்கையின் உற்ற நண்பனான முன்னாள் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே அவர்களாவார். அவர் அண்மையில் படுகொலை செய்யப்பட்டார். எமது சமய நம்பிக்கைப்படி நான் அபே அவர்களின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்க விரும்புகின்றேன்.
அபிவிருத்தி பொருளாதாரம் ஒன்றினை நோக்கி நாம் பயணிக்கும் பாதையினை மிகவும் பலப்படுத்திக் கொள்வதற்காக நாம் கடந்த காலத்தை பற்றி திரும்பிப் பார்த்தல் வேண்டும். எமது பொருளாதாரம் இந்த அளவு வீழ்ச்சி அடைவதற்கு காரணம் என்ன? எதிர்மறையான பிரதிபலன்கள் எம்மை ஏன் வந்தடைந்தன? தனி நபர்கள் செய்த தவறுகள் மூலமா? அல்லது கொள்கை ரீதியான குறைபாடுகள் காரணமாகவா? ஒவ்வொரு நபரும் நாம் விரும்பியவாறு பொருளாதாரத்தை வழிநடத்த எவ்வாறு வாய்ப்பு ஏற்பட்டது? நபருக்கு நபர் நாட்டின் பொருளாதாரக் கொள்கை மாற்றம் அடையலாமா? காலத்திற்கு காலம் அவ்வாறு கொள்கைகளை மாற்றுவது நாட்டிற்கு பயன்மிக்கதா? அல்லது பயனற்றதா?
இது பற்றி நாம் ஆழமாக தேடிப் பார்த்தோம். அதற்கு தீர்வாக எதிர்வரும் 25 வருடங்களுக்கு நாங்கள் தேசிய பொருளாதார கொள்கை ஒன்றினை தயாரிக்க உள்ளோம். வறிய மற்றும் குறைந்த வருமானம் பெறுகின்ற குழுக்களை கவனித்து தொழில்முயற்சியாளர்களை ஊக்குவித்து உருவாக்குகின்ற சமூக சந்தைப் பொருளாதார முறைமைக்குத் தேவையான அடித்தாளத்தை இடுவேன்.
2025 ஆம் ஆண்டளவில் ஆரம்ப நிலை வரவுசெலவுத் திட்டத்தில் மிகை ஒன்றினை ஏற்படுத்துவது எமது முயற்சியாகும். பொருளாதார அபிவிருத்தி வேகத்தை நிலையான தன்மைக்கு உயர்த்துவதும் நமது முயற்சியாகும். 2026 ஆம் ஆண்டாகும் போது நிலையான பொருளாதார அடிப்படை ஒன்றினை உருவாக்கிக் கொள்வது எமது எதிர்பார்ப்பாகும் தற்போது அரச கடன் அளவானது மொத்த தேசிய உற்பத்தியின் நூற்றுக்கு 140 சதவீதம் ஆகும். இதனை 2032 ஆம் ஆண்டளவில் மொத்தத் தேசிய உற்பத்தியில் நூறு சதவீதத்தை விடவும் குறைப்பது எமது திட்டமாகும்.
அவ்வாறு தேசிய பொருளாதாரக் கொள்கையின் ஊடாக நாட்டினையும,; நாட்டு மக்களையும் கட்டியெழுப்பும் செயற்பாட்டினை முன்னெடுத்துச் சென்றால், 2048 ஆம் ஆண்டிலே சுதந்திர தின நூற்றாண்டினைக் கொண்டாடும்;போது, முழுமையான அபிவிருத்தி அடைந்த ஒரு நாடக எம்மால் மாற முடியும்.
நான் இவ்வாறான நீண்டகால இலக்குகளுக்குத் திட்டங்களைத் தயாரிக்கும்போது சிலர் பரிகாசமாகப் பார்க்கின்றார்கள். கேலிக்கதைகள் சொல்கின்றனர். ஆம். நான் ஏனைய அரசியல்வாதிகள் போன்றவர் அல்ல. என்னிடம் இருப்பது நீண்டகாலத் திட்டங்கள். நான் திட்டமிடுவது எனது முன்னேற்றத்துக்காக அல்ல. இளைஞர் சமுதாயத்துக்காகவே. நாளைய நாளுக்காகவே. நான் இன்று நாட்டும் மரத்தின் அறுவடையை எனக்கு அனுபவிக்க கிடைக்காது என்பதை நான் நன்றாக அறிவேன். ஆனாலும் நாளைய தினம் எமது பிள்ளைகளான எதிர்காலப் பரம்பரைகள் அந்த அறுவடையை அனுபவிப்பார்கள்.
எமது நாட்டின் வெளிநாட்டுக் கொள்கை தொடர்பிலும் விசேடமாகக் குறிப்பிட நான் விரும்புகின்றேன். வெளிநாட்டுக் கொள்கையில் உறுதியற்ற தன்மை காரணமாக எமக்கு சர்வதேச மட்டத்தில் அதிகளவிலான இழப்பீடுகள் மற்றும் பின்னடைவுகள் ஏற்பட்டன. நான் இந்த நிலைமையை மாற்றுவேன். உலகத்தில் சகல நாடுகளும் எனது நண்பர்கள். எமக்கு எதிராளிகள் இல்லை. நாம் எந்தவொரு கட்சியையும் சேர்ந்தவர்கள் அல்லர். சகல நாடுகளோடும் நட்புரீதியான கொள்கையைப் பின்பற்றுவதனை நான் உறுதிப்படுத்துகின்றேன்.
சுபீட்சமான இலங்கையொன்றைக் கட்டியெழுப்புவதற்காகப் பொருளாதார மேம்படுத்தலுக்குச் சமாந்திரமாக சமூக மற்றும் அரசியல் மறுசீரமைப்பகள் பலவற்றைச் செய்யவேண்டுமென நான் இதற்குமுன்பும் வலியுறுத்தியுள்ளேன். எமது நாட்டின் மக்களும் பாரிய அரசியல் மறுசீரமைப்புச் செயற்பாடொன்றை எதிர்பாரக்கின்றனர்.
இன்று ஏற்பட்டுள்ளது என்ன? அரசியல் முறைமை மற்றும் அரசியல்வாதிகள் தொடர்பான மக்களது நம்பிக்கை அற்றுப்போய்விட்டது. அரசியல் பொறிமுறை தொடர்பான மக்களது எதிர்பார்ப்புகள் உடைந்துபோயுள்ளன. கடந்தகாலம்பூராகவும் எதிர்ப்பில் ஈடுபட்ட மக்கள் இந்த முறைமைத்தொகுப்பின் மாற்றத்தை கேட்டு நின்றது அதற்காகத்தான்.
இலங்கை நாட்டையும் நாட்டு மக்களையும் கட்டியெழுப்புவதற்குத் தேவையான சகல மாற்றங்களையும் செய்வதற்கு நான் நடவடிக்கை எடுப்பேன். நாடு கேட்கும் சமூக மற்றும் அரசியல் மறுசீரமைப்புகளை நான் நடைமுறைப்படுத்துவேன்.
ஆட்சி முறையில் மாற்றமொன்றை ஏற்படுத்தும் நோக்கில், நாடு பூராக ஆங்காங்கே ஆரம்பிக்கப்பட்ட போராட்டங்கள் பிற்காலத்தில் காலிமுகத்திடலில் கேந்திரமானது. நாட்டின் பிரதான நகரங்கள் சிலவற்றுக்கும் அது வியாப்தியடைந்தது. இந்தப் போராட்டமானது மிகவும் அஹிம்சையாகவும் ஆக்கபூர்வமாகவும் இடம்பெற்றது. இப்போராட்டக்காரர்கள் எந்தவொரு வன்முறைகளிலும் ஈடுபடவில்லை. அதன் காரணமாகவே குடும்பம் குடும்பமாக வந்து போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கினர். சிறு குழந்தைகளையும் போராட்ட பூமிக்கு அழைத்து வருவதற்கு பெற்றோர்கள் அச்சம் கொண்டிருக்கவில்லை.
ஒரு சந்தர்ப்பத்தில் போராட்டக்காரர்கள் சனாதிபதி செயலகத்தின் சுவர்களில் சித்திரம் வரைந்தனர். ஆனால் எந்தவிதமான பாதிப்பும் இல்லாதவாறு டிஜிட்டல் முறையில். ஆனால் அதன்பின்;னர் இப்போரட்டத்;தில் அஹிம்சாவாதம் கீழ்படிந்து வன்முறை மேலெழுந்தது. ஒரு சில குழுக்கள் போராட்டத்;தின் ஒற்றுமையை மிதித்து போராட்டத்தின்; உரிமையாளர்களாக மாறினர். அவர்கள் அன்பிற்கு பதிலாக போராட்டத்தில் வன்முறையை திணித்;தனர்.
நான் ஒருபோதும் வன்முறை மற்றும் பயங்கரவாதத்திற்கு இடமளிக்கமாட்டேன்.
ஆயினும் அஹிம்சை மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பேன்.
அமைதியாக போராட்டத்தில் ஈடுபடுவது அடிப்படை உரிமையாகும். அந்த உரிமையை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
நான் இந்தப் போராட்டக்காரர்களை வேட்டையாடப் போவதாக பாரிய பிரச்சாரத்தை சில குழுக்கள் சமூக ஊடகங்களின் வாயிலாக பரப்ப முயற்சித்து வருகின்றனர். ஆயினும் அது உண்மையல்ல. நான் அமைதியான போராட்டக்காரர்களுக்கு எந்தவொரு வகையிலும் பாதிப்பை ஏற்படுத்த இடமளிக்கப்போவதில்லை. அமைதியான போராட்டக்காரர்களைப் பாதுகாக்கவும், அவர்களுக்காக முன்வருவதற்கும் நான் விசேட செயலணியொன்றை தாபிப்பேன்.
அமைதியான போராட்டக்காருக்கு அநீதி விளைவித்;தால் அந்தச் செயலணிக்கு நாளில் 24 மணித்தியாலத்தில் எந்த ஒரு நேரத்திலும் முறைப்பாடு செய்ய முடியும். அவ்வாறான அறிவித்தல்கள் குறித்து விசாரித்து தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் குழுவொன்றை தாபிப்பேன்.
ஆயினும், திட்டமிட்டு சட்டத்தை மீறி, வன்முறை மற்றும் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களும்; உள்ளனர். அவர்களுக்கு எதிராக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்;படும். சட்டத்தை மீறி செயல்பட எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை. சட்டம் எனக்கும், உங்களுக்கும், அனைவருக்கும் ஒன்று.
மே 09ஆம் திகதி அமைதியான போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய நபர்கள் மற்றும் போராட்டத்தின் பெயரில் வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை பரப்பும் நபர்கள் குறித்;தும் அதேபோன்று சட்டத்தை அமுல்படுத்துவேன். இந்தச் செயற்பாட்டின்போது எந்த ஒரு அரசியல் அழுத்தம் இடம்பெறாத வகையில் பொறுப்புக்கூறுவேன்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வன்முறையைத் தூண்டும் குழு உள்ளனர். நாட்கணக்காக வரிசையிலுள்ள மக்களுக்கு எரிபொருள் பெற்றுக்கொள்வதற்கு இடமளிக்காது, பலவந்தமாக வரிசைகளை கடந்து முன்வருவோர் குறித்து முறைப்பாடுகள் வந்த வண்ணம் உள்ளன. இவ்வாறான பாதாள உலக கோஷ்டிகளுக்கு இடமளிக்க முடியாது. இப்போது நாம் எரிபொருள் நெருக்கடிக்கு முகம் கொடுக்கும் நேரம். ஆகவே எமக்கு விநியோகிக்;க கூடிய குறைந்தளவான எரிபொருளை நியாயமான முறையில் விநியோகிக்க வேண்டும். வரிசையை அத்துமீறுபவர்களுக்கு எதிராகச் சட்டத்தை வன்மையாக பிரயோகிக்;க வேண்டுமென நான்; பொலிசாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளேன்.
ஆகஸ்ட் மாதம் பௌத்த மற்றும் இந்து சமய பிரதான பல நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. ஆகஸ்ட் மாதம் அதிகமான சுற்றுலா பயணிகளும் வருகை தருவதற்கான காரணங்களில் வைபவமும் ஒன்று. ஆயினும் நாட்டின் குழப்பமான பின்னணி ஏற்படுத்தி வைபவங்களை சீர் குலைப்பதற்கும் ஒரு சில குழுக்கள் முயற்சித்து வருவதாக அறிக்கையிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு பிரிவினர் இது குறித்து அவதானிப்புடன் உள்;ளனர். இவ்வாறான சூழ்ச்சிகளில் சிக்;கி நாட்டின் எதிர்காலத்தை சீர்குலைக்கும் முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டாமென நான் உங்கள் அனைவரிடமும் கேட்டுக்கொள்கின்றேன்.
அமைதியான முறையில் எதிர்ப்பினைத் தெரிவிப்பதற்காக கொழும்பு மாநகர சபை மற்றும் கண்டி மாநகர சபை என்பவற்றின் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த இடங்களில் எதிர்ப்புத் தெரிவிக்கின்ற போராட்டக்காரர்களுக்குத் தேவையான வசதிகளை வழங்குவதற்கு மாநகர சபை நடவடிக்கை எடுக்கும். எனவே நான் மிகவும் வினயமாக வேண்டிக்கொள்வது அத்துமீறிய இடங்களில் தொடர்ந்தும் தங்கியிருக்க வேண்டாம் என்பதாகும். எனவே அவ்வாறான அத்துமீறிய இடங்களிலிருந்து வெளியேறி, சட்டத்தையும் ஒழுங்கினையும் பாதுகாப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அமைதியான போராட்டக்காரர்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன். இலங்கை தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காக உங்களது ஒத்துழைப்பினை எதிர்பார்க்கின்றேன்.
காலிமுகத்திடல் போராட்டத்துக்கு சமாந்தரமாக மட்டக்களப்பிலும் ஒரு போராட்டம் இடம்பெற்றது. நாளாந்தம் காந்தி சிலைவரை ஊர்வலமொன்று ஒருங்கிணைக்;கப்பட்டது. இந்தப் போராட்டத்துடன் இணைந்த திபெத் நாட்டை சோர்ந்த வணக்;கத்துக்குரிய தாசி சோதாப் அவர்கள் நிகழ்த்திய உரையை சுட்டிக்;காட்ட நான் விரும்புகிறேன்.
“நான் ஊர்வலத்;தில் இணைவதால் நீங்கள் உங்கள் பங்களிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளீர்கள். உங்கள் எதிர்ப்பை வேறொரு வகையில் வெளிப்படுத்துகின்றீர்கள். உங்களது பங்கேற்பில் வெளிப்;படுவது யாதெனில் நடைமுறையில் இடம்பெறும் விடயங்கள் தொடர்பான உங்களது கருத்தாகும். தங்களைத் தெரிவு செய்திருப்பது இந்த நெருக்கடி நேரத்;தில் விழிப்;புடன் இருப்;பது. அவ்வாறின்றி தனித்திருந்து அதிருப்தி கொள்;வதல்;ல. ஒரு போராட்டத்தை மற்றுமொரு போரட்டத்தால் தீர்;க்;க முடியாதென்பதை நாம் அறிவோம். நெருக்;கடியை அமைதியாகவே தீர்க்க வேண்டும்.”
தாஷி சோதப் தேரர் குறிப்பிட்டவாறு, நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக இந்த நெருக்கடியினைத் தீர்த்துக்கொள்ள வேண்டுமென நான் மீண்டும் இச்சபைக்கு வலியுறுத்த விரும்புகின்றேன். நாம் அனைவரும் ஒன்றிணைவோம். 21 ஆம் நூற்றாண்டிற்குத் தேவையான சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்களை மேற்கொள்வோம்.
இங்கு சில காரணிகளின் பக்கம் நான் கவனம் செலுத்த வைப்பதற்கு விரும்புகின்றேன். இந்த நெருக்கடியினைத் தீர்த்துக்கொண்டு நாம் எவ்வாறு முன்னோக்கிச் செல்லல் வேண்டும்? அப்பயணத்தின் போது அரசியல் கட்சிகளின் பொறுப்புக்கள் என்ன? எமது மரபுரீதியான அரசியல் சிந்தனைக்குள் அடைபட்டு இப்பயணத்தைச் செல்ல முடியுமா?
அரசியல் கட்சி முறை பற்றி நாம் புதிதாக சிந்திக்க வேண்டியுள்ளது. கட்சிகளின் செயற்பாடானது எதிர்காலத்திற்கு பொருந்தக்கூடியவாறு மாற்றியமைக்கப்படுதல் வேண்டும். அரசியல் ஒன்று நாம் இன்று நினைத்துக்கொண்டிருப்பவை, அரசியல் ஒன்று நாம் இன்று மேற்கொள்பவை அனைத்தையும் அதே விதத்தில் நாம் முன்னெடுத்துச் செல்வதா என சிந்தித்தல் வேண்டும். அரசியல் கல்வி பற்றி ஆழமாக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
1977 ஆம் ஆண்டிலே இளைஞர் யுவதிகள் என்ற வகையில் எமது எதிர்பார்ப்புகள் மற்றும் அபிலாஷைகள் பலவற்றினை அடைந்துகொள்வதற்குரிய புதிய பொருளாதாரம் ஒன்றினை உருவாக்கிக்கொள்ள எம்மால் முடிந்தது. தற்போது எதிர்காலத்திற்கு உகந்த புதிய பொருளாதாரம் ஒன்றினை உருவாக்கிக்கொள்வதற்கு எமது இளம் பராயத்தினரின் முழுமையான பங்களிப்பு கிடைக்கப் பெறுதல் வேண்டும். அவர்களது திறமைகள் போராட்ட பூமிக்கு மாத்திரம் வரையறுக்கப்படலாகாது. நாட்டின் எதிர்காலத்திற்கு அவர்களது ஆக்கத்திறன்மிக்க திறமைகளை ஈடுபடுத்துவதற்கான வாய்ப்பினை நாம் திறந்து விடுதல் வேண்டும். எதிர்வரும் தேர்தல் ஒன்றின் போது அதிகம் அதிகம் இளைஞர் யுவதிகளே இப்பாராளுமன்றத்திற்கு வருகை தருதல் வேண்டும். எதிர்வரும் தேர்தலானது இளைஞர் வர்க்கத்தின் சந்தர்ப்பமாக அமைதல் வேண்டும்.
எனவே அதற்கு இடம் அளிக்கக் கூடிய வகையில் புதிய மனப்பான்மைகளைக் கொண்ட புதிய அரசியலமைப்பு ஒன்றினை உருவாக்க வேண்டியமை இங்கு பணியென நான் கருதுகின்றேன்.
தற்போது தேர்தல் ஆணைக்குழு, அரசாங்க சேவைகள் ஆணைக்குழு, போலீஸ் ஆணைக்குழு, நீதிச் சேவைகள் ஆணைக்குழு உள்ளிட்ட அனைத்திற்கும் உறுப்பினர்களை நியமிக்கும் பூரண உரிமை சனாதிபதிக்கே உண்டு. அது சனநாயகத்திற்கு உகந்த நிலை ஒன்றல்ல என்பதனை நான் நேரடியாக குறிப்பிட விரும்புகின்றேன். நாம் அந்த நிலையினை மாற்றியமைத்தல் வேண்டும். தற்போது சனாதிபதியிடம் இலங்கையின் ஆதிகாலத்தில் அரசர் ஒருவரிடம் இருந்த அதிகாரங்களை விடவும் அதிகமான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதனை உடனடியாக மாற்றி அமைத்தல் வேண்டும்.
ஒரு நாட்டின் சனாதிபதி என்பவர் மக்களுக்கு மேலால் வாழுகின்ற அரசராக அல்லது கடவுளாக இருக்க வேண்டியதில்லை. அவரும் பிரசையில் ஒருவர். எனவே தனியான கொடி, இலச்சினை, தனியான கௌரவங்கள் மூலம் புனிதத்தன்மைக்கு ஆளாக்க வேண்டியதில்லை.
அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயற்பாட்டின் ஆரம்பமாக, 19 ஆவது திருத்தத்திலிருந்த அனைத்து நேர்மறையான விடயங்களையும் உள்ளடக்கி 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்றிக்கொள்ள நாம் எதிர்பார்க்கின்றோம். அதற்காக இந்த கௌரவ சபையின் முழுமையான ஆதரவினை நான் எதிர்பார்க்கின்றேன்.
22 ஆவது அரசியல் அரசியலமைப்புத் திருத்த வரைவு தற்போது பாராளுமன்றத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது பற்றி கலந்துரையாடி பொது இணக்கப்பாடு ஒன்றுக்கு வருவது பொருத்தம் என நான் கருதுகிறேன். எமக்கு தேவையான அனைத்தும் 22 ஆவது திருத்தத்தின் ஊடாக நிறைவேற்றிக்கொள்ள முடியாது போகலாம். அது எமது மறுசீரமைப்புத் தொடரின் முதலாவது அடித்தாளமாகும். இச்சபையிலுள்ள அனைவரும் ஏகமானதாக அதனை நிறைவேற்றிக்கொள்வது மிகவும் சிறந்த முன்னோக்கிய நகர்வாக அமையும்.
நான் இதற்கு முன்னரும் சபையில் குறிப்பிட்டது போன்று பாராளுமன்ற மேற்பார்வைக் குழுக்களை உடனடியாக நிறுவுவதற்கு நடவடிக்கை எடுப்பேன். .அந்த குழுக்கள் ஊடாகவும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஒன்றாக இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புக் கிட்டும். சாதாரண சமூகமொன்றிற்கான தேசிய இயக்கம் இது தொடர்பாக சமர்ப்பித்த அறிக்கையினை நான் ஏற்கனவே இச்சபையில் சமர்ப்பித்துள்ளேன்.
அவ்வாறே அரசியல் கட்சித் தலைவர்களை உள்ளடக்கிய தேசிய சபை ஒன்றினை நிறுவுவதற்கு நான் நடவடிக்கை எடுப்பேன். முன்னெடுக்கும் நோக்கில் அனைவரினதும் ஆகக் குறைந்த பொது இணக்கப்பாடொன்றுடன் கூடிய வேலைத்திட்டம் ஒன்றினை இந்த தேசிய சபையின் ஊடாக தயாரித்துக்கொள்ள எம்மால் முடியும்.
பேதங்கள் மூலம் எமது நாடு முற்காலம் தொட்டு பின்னடைவுகளுக்கு உள்ளானது. நாம் இன ரீதியாக பிரிந்தோம், மொழி ரீதியாக பிரிந்தோம், சமய ரீதியாக பிரிந்தோம். கட்சி ரீதியாக பிரிந்தோம். வகுப்பு ரீதியாக பிரிந்தோம், பூகோள ரீதியாகவும் பிரிந்தோம,; குல ரீதியாகவும் பிரிந்தோம்.
சில தரப்பினர்கள் இப்பிரிவினை மேலும் விஸ்தரித்தனர். அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக இவ்வாறான பிளவுகளை பயன்படுத்தினர். பிரித்து ஆள்வதன் அனுகூலத்தை அனுபவித்தனர். முஸ்லிம் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையில் பிரச்சினைகளை உருவாக்கினர். தமிழ்; மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையில் பிரச்சினைகளை உருவாக்கினர். இவ்வாறு இன ரீதியாவும் சமய ரீதியாகவும் பல்வேறு விதமான பிளவுகளை ஏற்படுத்தி அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்கு முயற்சித்தனர்.
1977 இல், அரசியலில் பிரவேசித்த நாள் முதல் எனக்கு தேவைப்பட்ட ஒரு விடயம் இவ்வாறான பிரிவுகளற்ற இலங்கையெனும் ஆளடையாளத்தைக் கொண்ட சமூகமொன்றினை உருவாக்குவதாகும். ஒருதாயின் பிள்ளைகளாக ஒற்றுமையாக வாழக்கூடிய தேசமொன்றை உருவாக்குவதாகும். இம்முயற்சியில் தொடர்ச்சியாக ஈடுபட்டதன் காரணமாக நான் அரசியல் ரீதியாக தோல்விகளை சந்தித்தேன். தோல்விகளை சந்தித்தேன். சிங்கள பேரினவாதிகளின் மாத்திரமன்றி, தமிழ், முஸ்லிம் பேரினவாதிகளின் விமர்சனங்களுக்கு ஆளானேன். இனவாதிகளுக்கும். சமயவாதிகளுக்கும் எதிராக தொடர்ச்சியாக ஈடுபட்டமையால் சில அரசியல் கட்சிகள் என்னை தேசத்துரோகியாகவும் சமய எதிரியாகவும் அவதூறுக்கு உட்படுத்தின
எனினும் நான் எனது கொள்கையில் இருந்து விலகிச் செல்லவில்லை. ஒருபோதும் நான் அந்தக்கொள்கையிலிருந்து விலகவும் மாட்டேன்.
இன்று இளம்பராயத்தில் பெரும்பாலானவர்கள் எனது அந்தக் கொள்கையை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என ஏற்றுக்கொண்டுள்ளனர். அவர்கள் இனவாதத்திற்கும் சமயவாதத்திற்கும் எதிராக கோஷம் எழுப்புகின்றனர். சிங்களவர், தமிழர், முஸ்லிம், பறங்கியர் உள்ளிட்ட அனைத்து இனங்களுக்கும் சமத்துவமாக கவனித்தல் வேண்டும் என சிங்கள இளைஞர் யுவதிகள் கூறுகின்றனர். சுமார் ஐந்து தசாப்த காலமாக நான் இச்சமூகத்திற்கு விளங்கவைப்பதற்கு முயற்சித்த சத்தியத்தை இன்று இளம் பராயத்தினர் புரிந்துகொண்டுள்ளமையானது மகிழ்ச்சிக்குரிய ஒரு விடயமாகும்
இந்த இளைஞர் யுவதிகளின் ஒத்துழைப்புடன், முழு நாட்டையும் அக்கொள்கையின் பக்கம் ஒன்றுதிரட்டுவதற்கான வாய்ப்பு தற்போது எமக்கு கிடைத்துள்ளது. இன, மத, கட்சி, குலம் உள்ளிட்ட அனைத்து வேதங்களையும் ஒழிப்பதற்கு வாய்ப்புக்குக் கிட்டியுள்ளது. அந்த பேதங்கள் காரணமாக சில சமயங்கள் படுகின்ற துன்பத்தை ஒழிப்பதற்கு வாய்ப்பு கிட்டியுள்ளது. திறமை மற்றும் தேர்ச்சி மூலம் நபர்களின் எதிர்காலப் பயணத்தைத் தீர்மானிப்பதற்குகான அடித்தாளத்தை உறுதிப்படுத்துவதற்கும் வாய்ப்புக் கிட்டியுள்ளது. அனைத்துப் பிரசைகளும் சுதந்திரமாக வாழக் கூடிய சூழலை உருவாக்குவதற்கான பின்னணி ஏற்பட்டுள்ளது.
இங்கு பல வருட காலமாக தமிழ் மக்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வினைப் பெற்றுக்கொடுக்க வேண்டியமை அத்தியாவசியமான காரணி ஒன்றாகும். யுத்தத்தின் மூலம் பாதிக்கப்பட்ட அவர்கள் சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகள் பலவற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தீர்க்க வேண்டிய காணிப் பிரச்சினைகள் பல உள்ளன. வடக்கின் அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பாக நாம் புதிதாக சிந்திக்க வேண்டியுள்ளது. வெளிநாடுகளில் வாழுகின்ற இலங்கை தமிழ் மக்களுடன் நெருங்கிச் செயற்பட்டு, இலங்கையினை மீளக் கட்டியெழுப்பும் வேலைத் திட்டத்திற்கு அவர்களது ஒத்துழைப்பினைப் பெற்றுக்கொள்வதற்கும் நாம் எதிர்பார்க்கின்றோம்.
எமது நாட்டின் சனத்தொகையில் பெரும்பான்மையாக காணப்படுகின்றன பெண்கள் இன்னமும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள், ஏனைய வித்தியாசங்கள், குறைபாடுகள் பலவற்றிற்கு முகம்கொடுத்து வருகின்றனர். இந்நிலையினை மாற்றியமைத்தல் வேண்டும். அதற்குத் தேவையான அரசியல் மற்றும் சமூக செயற்பாடுகளை நாம் எடுக்க வேண்டியுளளது.
அவ்வாறே இலஞ்சம், ஊழல் மற்றும் மோசடி என்பவற்றினை சமூகத்தில் இருந்து முழுமையாக ஒழிப்பதும் கட்டாயமான ஒன்றாகும். இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்கான தேசியக் கொள்கை ஒன்றினை நாம் அமுல்படுத்துவேன். இதற்குத் தேவையான சட்டதிட்டங்கள் நிதி அமைச்சினால் தயாரிக்கப்பட்டுவரும் நிலையில் உள்ளன. அவ்வாறே சர்வதேச நாணய நிதியத்துடனும் ஊழல் ஒழிப்பு பற்றிய இணக்கப்பாடொன்றிற்கு வருவோம்.
இந்த அனைத்துப் பணிகளையும் மேற்கொள்வதற்கு முழுமையான அரசியல் மறுசீரமைப்புத் திட்டமொன்று தேவைப்படுகின்றது. அந்த மறுசீரமைப்பை எனது பதவிக்காலத்தினுள் நான் மேற்கொள்வேன். எனினும் அது எனது தனிப்பட்ட அபிப்பிராயத்திற்கு அமைவாக அல்ல. இளைஞர்களின், பெண்களின் மற்றும் ஏனைய மக்களின் கருத்துக்களை அடிப்படையாக் கொண்டு மக்களினதும் பாராளுமன்றத்தினதும் இணக்கப்பாட்டிற்கு அமையவே அதனை மேற்கொள்வேன்.
மேற்கொள்ள வேண்டிய சமூக மற்றும் அரசியல் மறுசீரமைப்புக்கள் என்ன என்பது பற்றி தீர்மானிப்பதற்காக மக்கள் சபை ஒன்றினை நிறுவுவதற்கு நான் நடவடிக்கை எடுப்பேன். அரசியல் கட்சிகள், நானாவித அமைப்புகள் மற்றும் இது தொடர்பாக ஆர்வம் காட்டுகின்ற அனைத்து நபர்களதும் கருத்துக்களை மக்கள் சபையின் ஊடாக விசாரிப்பதற்கான பொறிமுறை ஒன்றினை உருவாக்குவேன். இதற்காக கருத்துக்களைப் பெற்றுத்தருமாறு போராட்டத்துடன் தொடர்புடைய இளைஞர்களிடமும், தொடர்புபடாத இளைஞர்களிடமும் நான் முக்கியமாக வேண்டுகோள் விடுக்கின்றேன்.
எமது நாட்டின் சனாதிபதி முறைமையினை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல வேண்டுமா? நாட்டிற்கு மிகவும் பொருத்தமான முறைமை எது? ஆட்சி முறையானது எவ்வாறான மறுசீரமைப்புகளுக்கு உட்பட வேண்டும்? உள்ளிட்ட அனைத்து விடயங்களும் மக்கள் சபையின் ஊடாக கலந்துரையாடப்படும். நாட்டிற்கு மிகவும் பொருத்தமான முறைமை தொடர்பாக தேசிய இணக்கப்பாடொன்றுக்கு வந்ததன் பின்னர் அம்முறைமையினை சட்டமாக வரைந்து நடைமுறைப்படுத்துவேன்.
இவ்வாறான தேசிய இணக்கப்பாட்டிற்கு வருவது கட்டாயமான ஒரு விடயமாகும். அதுபற்றி நான் சிறிது விளக்க விரும்புகின்றேன். நமது நாட்டில் பல சனாதிபதி தேர்தல்களின் போது முன்வைக்கப்பட்ட பிரதான வாக்குறுதி தான் நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதி முறைமையை ஒழிக்கப்படும் என்பதாகும். எனினும் அந்த வாக்குறுதியை வழங்கி அதன் மூலம் அதிகாரத்திற்கு வந்த எவரும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதி முறைமையை ஒழிக்கவில்லை. மாறாக ஒருவர் நிறைவேற்று சனாதிபதி முறைமையினை ஒழித்தாலும், அதன் பின்னர் ஆட்சிக்கு வரும் கட்சியினால் மீண்டும் அதனை மாற்றியமைக்கும் இயலுமை உள்ளது. அதனால் தான் நாங்கள் மக்கள் சபை ஊடாக பொதுவான தேசிய இனக்கப்பாடு ஒன்றிற்கு வரவேண்டிய தேவையுள்ளது.
மக்கள் சபை என்பது முழுமையாக சுயாதீனமாக செயற்படும் ஒரு நிறுவனமாகும். அரசாங்கம் அதற்குத் தேவையான வளங்களை வழங்குவதை மாத்திரமே மேற்கொள்ளும். அதன் பணிகளுக்கு அல்லது தீர்மானங்களுக்கு அரசாங்கத்தின் விதவித தாக்கமும் இருக்காது. மக்கள் சபையின் அமைவு பற்றி நாம் பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடி தீர்மானிப்போம்.
சாதாரண சமூகமொன்றிற்கான தேசிய இணக்கமானது தற்போதும் கூட, மக்கள் சபை பற்றி கருத்துக்கள் மற்றும் பிரேரணைகள் என்பவற்றினை எமக்குப் பெற்றுத்தந்துள்ளன.
மக்கள் சபையின் பணிகளை மிகவும் முறைப்படுத்துவதற்காகவும் மற்றும் வினைத்திறன்மிக்கதாக அமையும் பொருட்டு ஐக்கிய நாடுகள் சபை போன்ற பல்தரப்பு அமைப்புகளின் ஒத்துழைப்பினைப் பெற்றுக்கொள்வதற்கும் வாய்ப்பினை வழங்குவேன். அவதானிப்புகள் அல்லது தொழில்நுட்ப ஆலோசனை மட்டத்தில் அவ்வாறான ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்வதற்கு மக்கள் சபைக்கு வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அனைத்துத் தரப்பினரதும் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் என்பவற்றினைப் பெற்றுக்கொண்டு, முழுமையான வெளிப்படையான தன்மையுடன் செயற்;பட்டு சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மறுசீரமைப்பு தொடர்பாக தேசிய திட்டமொன்றினை தயாரிக்கும் பொறுப்பு மக்கள் சபையிடம் ஒப்படைக்கப்படும். மிக விரைவில் இத்திட்டத்தைத் தயாரிக்குமாறு நாம் மக்கள் சபையிடம் வேண்டுவோம்.
நண்பர்களே,
நான் 1977 ஆம் ஆண்டு இளம் உறுப்பினர் ஒருவராக பாராளுமன்றத்தில் பிரவேசித்தேன். நாட்டிலே பல்வேறு பதவிகளை வகித்தேன். அவமானப்படுத்தல்கள் – பாராட்டுக்கள் மத்தியில் மனச்சாட்சிக்கு ஏற்ப சரியென நினைத்தவற்றினை நாட்டிற்காக மேறகொண்டேன். கடந்த இரண்டு மூன்று வருட காலப் பகுதியினுள் நாடு படிப்படியாக நிலையற்றத் தன்மையினை நோக்கிப் பயணிப்பதை நான் கண்டேன். அவை அனைத்தையும் மீண்டும் திரும்பிப் பார்க்கும் போது எனக்கு நினைவில் வருவது நான் றோயல் கல்லூhயில் கல்வி கற்கும் போது வாய்ப்பாடம் செய்த உலக புகழ்பெற்ற கலைஞர் ஒருவரான ருத்யாத் கிப்லிங் எழுதிய “இப்” எனப்படும் கவிதை வரிகளாகும்.
அதன் ஒரு பகுதியை நான் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.
If you can meet with Triumph and Disaster
And treat those two impostors just the same;
If you can bear to hear the truth you’ve spoken
Twisted by knaves to make a trap for fools,
Or watch the things you gave your life to, broken,
And stoop and build ’em up with worn-out tools:
– you’ll be a Man, my son!
“நீங்கள் ட்ரையம்ப் மற்றும் பேரழிவை சந்திக்க முடிந்தால்
அந்த இரண்டு ஏமாற்றுக்காரர்களையும் ஒரே மாதிரியாக நடத்துங்கள்; ;
நீங்கள் சொன்ன உண்மையைக் கேட்க உங்களால் முடிந்தால்
முட்டாள்களுக்கு ஒரு பொறியை உருவாக்க கத்திகளால் முறுக்கப்பட்ட,
அல்லது உங்கள் வாழ்க்கையை நீங்கள் கொடுத்த,
உடைந்த விடயங்களைப் பாருங்கள்,
மேலும் தேய்ந்து போன கருவிகளைக் கொண்டு
குனிந்து அவற்றை உருவாக்குங்கள்:
– நீ ஒரு மனிதனாக இருப்பாய், என் மகனே!”
எனவே நாம் நேர்மையான உள்ளத்துடனும் உன்னத எதிர்பார்ப்புடனும் புதியதோரு பயணத்தை ஆரம்பிப்போம். உண்மையின் மற்றும் சுதந்திரத்தினை விதைகளை நட்டுவோம். நிகழ்காலத்தில் எம்மைப் பற்றி அதிகமான குற்றச்சாட்டுக்களும் விமர்சனங்களும் எழலாம். எனினும் நட்டிய உண்மையின் மற்றும் சுதந்திரத்தின் விதைகள் வளர்ந்து பலனளிக்கும் எதிர்காலத்தில் ஒரு நாள், நாம் சரியென்பது நிரூபிக்கப்படும்.
எனது உரையினை நிறைவு செய்து நாம் புத்தபெருமான் அவர்கள் போதித்த கருத்தொன்றினை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகின்றேன். பல சந்தர்ப்பங்களில் புத்தபெருமான் அவர்கள் இதனை வலியுறுத்தியதாக திரிபிடகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“அத்ததீபா விஹரத……”
தாம் தமக்கே தீபமாக இருங்கள்.
நாம் எமக்கு தீபமாக அமைவோம். அந்த தீபத்தின் ஒளியால் இலங்கை தீபத்தை ஒளிமயமாக்குவோம்.
நன்றி