அல்-கொய்தா தலைவர் கொல்லப்பட்டது எப்படி – அமெரிக்கா வகுத்த திட்டம்.
அமெரிக்கா மேற்கொண்ட ஆள் இல்லா விமான தாக்குதலில் அல்-கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டார்.
ஆப்கானிஸ்தானின் காபூல் புறநகர் பகுதியில் வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் அவர் கொல்லப்பட்டுள்ளார். நீண்ட காலமாக அவரை அமெரிக்கா தேடி வந்த நிலையில், தற்போது கொல்லப்பட்டுள்ளார்.
இதன்படி, மிகவும் துல்லியமாக தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட ஹெல்பயர் ஆர் 9 எக்ஸ் ரக ஏவுகணையை பயன்படுத்தி அமெரிக்கா இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏவுகணை எம்.க்யூ-9 ரீப்பர் டிரோனில் (ஆளில்லா விமானம்) பொருத்தப்பட்டு கொண்டு செல்லப்படும். அதிநவீன கேமரா உள்ளிட்ட வசதிகளை கொண்ட ஆளில்லா விமானம் இலக்கின் மேலே பறந்து செல்லும். லேசர் கருவி பொருத்தப்பட்ட ஆர் 9 எக்ஸ் ஏவுகணை இலக்கை நோக்கி ஏவப்படும்.
இலக்கின் மீது மோதுவதற்கு முன்பு ஏவுகணையின் பக்க வாட்டில் இருந்தது 6 பிளேடுகள் வெளியாகும். அதன்பின் இலக்கு வைக்கப்பட்ட நபர் மீது மோதும் ஏவுகணை அவரது உடலை துண்டு துண்டாக்கி விடும். ஏவுகணை வெடிக்காது.
இதன்மூலம் இலக்கு மட்டும் அழிக்கப்படும் மற்றவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இந்த நவீன ஏவுகணையை தான் அல்-ஜவாஹிரியை கொல்ல அமெரிக்கா பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் திட்டத்தின் படி அல்-ஜவாஹிரி வீட்டில் இருந்த போது கொல்லப்பட்டதாகவும் இந்த தாக்குதலில் வீட்டில் இருந்த யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல்-ஜவாஹிரியை கொல்ல இரண்டு ஏவுகணைகள் வீசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அல்-ஜவாஹிரி இந்த ஆண்டு தனது குடும்பத்தினருடன் பாதுகாப்பாக காபூலில் உள்ள வீட்டுக்கு இடம்பெயர்ந்ததை அமெரிக்க உளவுத்துறையினர் கண்டுபிடித்தனர்.
இதனை உறுதிப்படுத்த அமெரிக்க தரப்பினர்கள் நேரம் எடுத்துக் கொண்டனர். அல்-ஜவாஹிரி தனது வீட்டு பால்கனிக்கு வரும் போது அவரது முகத்தை புகைப்படம் எடுத்து ஸ்கேன் செய்து அது அவர் தான் என்பதை உறுதிப்படுத்தினர்.
பின்னர் தாக்குதலுக்கான திட்டம் மே மாதம் வகுக்கப்பட்டது. அல்-ஜவாஹிரி வீட்டின் கட்டமைப்பு, அவரது குடும்பத்தினரின் வாழ்க்கை முறை உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்ட பின்னரே தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.