அன்புசெழியன் தொடர்புடைய இடங்களில் மூன்றாவது நாளாக தொடரும் சோதனை..
மதுரையில் சினிமா பைனான்சியர் அன்புசெழியனுக்கு சொந்தமான இடங்களில் மூன்றாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனையை தொடர்ந்து வருகின்றனர்.
மதுரையை சேர்ந்த பிரபல சினிமா பைனான்சியரான அன்புச்செழியன் 20 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் திரைப்பட தயாரிப்பு மற்றும் தயாரிப்புகளுக்கு கடனுதவி அளிப்பது, படங்களை விநியோகம் செய்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார். கோபுரம் பிலிம்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனமும், கோபுரம் சினிமாஸ் என்ற பெயரில் மதுரையில் 3 திரையரங்குகளும், மீனாட்சி அம்மன் கோவில் அருகே கோபுரம் ஓட்டல் என்ற பெயரில் நட்சத்திர விடுதி உள்ளிட்டவைகளையும் நிர்வகித்து வருகிறார்.
கோபுரம் பிலிம்ஸ் மூலம் ஆண்டவன் கட்டளை, வெள்ளைக்கார துரை, தங்கமகன், மருது உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். உத்தமவில்லன், விக்ரம் உள்ளிட்ட பல்வேறு பிரபல படங்களின் தயாரிப்புகளுக்கு கடனுதவி செய்துள்ளார்.
2003ம் ஆண்டு திரைப்பட தயாரிப்பாளர் ஜி.வெங்கடேஸ்வரன் தற்கொலை வழக்கு, 2017ம் ஆண்டு தயாரிப்பாளர், நடிகர் சசிகுமாரின் நண்பர் அசோக்குமார் தற்கொலை வழக்கு ஆகிய வழக்குகளில் தொடர்பு இருந்ததாக புகார்கள் எழுந்திருந்தன.சுந்தரா டிராவல்ஸ் பட தயாரிப்பாளர் எஸ்.வி.தங்கராஜ் அளித்த புகாரின் அடிப்படையில் 2011 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டிருந்தார்.
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் பட விநியோகம் தொடர்பாக கடந்த 2020ம் ஆண்டு இவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றிருந்தது. அந்த சோதனையின் போது கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டு கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்ததும் உறுதிப்படுத்தப்பட்டது.
தற்போது, இவர் மீண்டும் வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரினை தொடர்ந்து சென்னை, மதுரை மாவட்டங்களில் அன்புசெழியன் மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான சுமார் 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் (ஆக.2) காலை 6 மணி முதல் அதிரடி சோதனையை துவக்கினர்.
மதுரையில் அன்புச்செழியன், அவரது மகள் சுஷ்மிதா, இளைய சகோதரர் அழகர் ஆகியோருக்கு சொந்தமாக காமராஜர் சாலை, தெப்பக்குளம், கீரைத்துறை, வில்லாபுரம் பகுதிகளில் உள்ள வீடுகள், தெற்குமாசி வீதியில் உள்ள அலுவலகம், செல்லூரில் உள்ள திரையரங்கம், மீனாட்சி அம்மன் கோவில் அருகேயுள்ள ஓட்டல் உள்ளிட்ட சுமார் 30 இடங்களில் 50 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
இரண்டு நாட்களாக இரவு பகலாக நடைபெற்று வரும் இந்த சோதனை மூன்றாவது நாளாக இன்றும் தொடர்கிறது. இரண்டு நாள் சோதனையில் கணக்கில் வராத பல கோடி ரூபாய் ரொக்கம், தங்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்றைய தினம் கைப்பற்றப்பட்ட ரொக்கம் மற்றும் ஆவணங்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்களிடம் விசாரணையும், வரி ஏய்ப்பு செய்ததை உறுதிப்படுத்துவதற்கு தேவையான ஆவணமாக்கல் பணிகளும் நடைபெறும் என தெரிகிறது.