நிதி முறைகேடு புகார் : கேரள முன்னாள் நிதியமைச்சர் தாமஸ் ஐசக்கிற்கு அமலாக்கத்துறை சம்மன்
கேரளா மாநிலத்தின் முன்னாள் நிதியமைச்சரும் மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தாமஸ் ஐசக்கிற்கு அமலாக்கத்துறை விசாரணைக்காக சம்மன் அனுப்பியுள்ளது. வரும் 11ஆம் தேதி கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் முன் தாமஸ் ஐசக் ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.
கேரளா மாநிலத்தில் 2016ஆம் ஆண்டு முதல் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று பினராயி விஜயன் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி நடத்தி வருகிறார். 2016-2021 ஆட்சி காலத்தில் பினராயி தலைமையிலான அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்தவர் அக்கட்சியின் மூத்த தலைவர் தாமஸ் ஐசக். இவர் நிதியமைச்சராக இருந்த போது KIIFB எனப்படும் மாநில உட்கட்டமைப்பு முதலீடு வாரியத்தில் சட்டவிரோத நிதி பரிவர்த்தனைகள், நிதிமுறைகேடுகள் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுப்பி அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
அம்மாநிலத்தின் முக்கிய உட்கட்டமைப்பு திட்டங்கள் இந்த அமைப்பின் மூலம் நடைபெறும் நிலையில், ரூ.50,000 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு இந்த அமைப்பு ரூ.2,150 கோடி நிதி திரட்டியுள்ளது. அதில் பெரும் அளவில் விதிமீறல்கள் நடைபெற்று நிதி முறைகேடு ஏற்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை, சிஏஜி அறிக்கைகள் குற்றம் சாட்டி விசாரித்து வருகின்றன.
இதுதொடர்பாக விசாரணைக்கு தாமஸ் ஐசர் ஜுலை 18ஆம் தேதி ஆஜராக அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு அவர் ஆஜராகாத நிலையில்,மீண்டும் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி ஆஜராக உத்தரவிட்டுள்ளது. இது ஒரு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என மத்திய பாஜக அரசு மீது தாமஸ் ஐசக் விமர்சனம் தெரிவித்துள்ளார். அமலாக்கத்துறை, வருமானவரித்துறை போன்ற அமைப்புகளை மத்திய பாஜக துஷ்பிரயோகம் செய்து வருகிறது. எனவே, நான் விசாரணைக்கு ஆஜராக மாட்டேன். எனக்கு அதைவிட வேறு முக்கிய வேலைகள் உள்ளன. தேவைப்பட்டால் அவர்கள் என்னை கைது செய்து விசாரிக்கட்டும் என தாமஸ் ஐசக் கூறியுள்ளார்.
பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களான கேரளா, மேற்கு வங்கம், டெல்லி ஆகியவற்றில் அம்மாநிலத்தை ஆளும் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமூகர்கள் அமலாக்கத்துறை கண்காணிப்பு வளையத்தில் உள்ளனர். டெல்லி ஆம் ஆத்மி அமைச்சர் சத்தியேந்தர் ஜெயின், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி அவரது கூட்டாளிகள் என பலர் தற்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளது. தமிழ்நாட்டிலும், சில நாள்களுக்கு முன்னார் திமுகவின் மூத்த தலைவரும், அமைச்சருமான ஐ பெரியசாமி அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜாரானார்.