6 தமிழ்க் கட்சிகளும், 3 முஸ்லிம் கட்சிகளும் சர்வகட்சி வேலைத்திட்டத்துக்கு நேசக்கரம் கஜேந்திரகுமார் அணி மாத்திரம் மௌனம்.
நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 6 தமிழ்க் கட்சிகளும், 3 முஸ்லிம் கட்சிகளும் சர்வகட்சி வேலைத்திட்டத்துக்கு இதுவரை ஆதரவை வெளியிட்டுள்ளன. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுதியான நிலைப்பாடு மட்டுமே இன்னும் வெளியாகவில்லை.
அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய தேசிய சபை, நாடாளுமன்ற குழுக்களின் தலைமைப்பதவி உள்ளிட்ட சர்வகட்சி வேலைத்திட்டத்துக்கு இரா. சம்பந்தன் தலைமையிலான இலங்கைத் தமிழரசுக் கட்சி (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு), மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி, சி.வி. விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன இணக்கம் தெரிவித்துள்ளன. எனினும், சர்வகட்சி அரசில் பங்காளிகளாகுவது குறித்து மேற்படி கட்சிகள் இறுதி முடிவு எட்டப்படவில்லை.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நாளை வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள கலந்துரையாடலின் பின்னர் இறுதி முடிவு எட்டப்படவுள்ளது என அறியமுடிகின்றது.
அதேவேளை, டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.டி.பி.டி.), செந்தில் தொண்டமான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி, அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் என்பன சர்வகட்சி அரசில் பங்காளியாகுவதற்கும் பச்சைக்கொடி காட்டியுள்ளன.