ஜோசப்பின் கைதுக்கு எதிராக விக்கிரமபாகு போர்க்கொடி!
“புதிய ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் சிம்மாசன உரையை ஆற்றி ஜனநாயகத்தைக் கொண்டு வருவோம் என உறுதியளித்த அதே நாளில் உயர் தொழிற்சங்கத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் கைதுசெய்யப்பட்டமை ஜனநாயகத்துக்குக் கடுமையான அவமானமாகும்.”
இவ்வாறு கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தலைமையிலான நவசமசமாஜக் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த மே 28ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது நீதிமன்ற உத்தரவை மீறினார் என்று குற்றஞ்சாட்டி இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலினைப் பொலிஸார் ஓகஸ்ட் 3ஆம் திகதி கைதுசெய்தது. தற்போது அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதைக் கண்டித்து நவசமசமாஜக் கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
“சில தொழில்நுட்ப உத்தரவுகளை மீறுவது பொதுப் போராட்டங்களின்போது பொதுவான நிகழ்வு ஆகும். எப்போதும் மக்கள் கைதுசெய்யப்படுவதில்லை. அவசர அவசரமாக மேற்கொள்ளப்பட்ட இந்தக் கைது வழக்கத்துக்கு மாறானது.
இந்தச் சம்பவம் நடந்து சுமார் இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில், இந்த ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் கைதுசெய்யப்பட்டிருப்பது ஒரு அசாதாரண சம்பவம் என்பதை நாங்கள் சுட்டிக்காட்டுகின்றோம்.
இதற்கமைய, திட்டமிட்டு காலம் கடந்து கைதுசெய்திருப்பது ஜனநாயகத்துக்கு எதிரான கடுமையான அவமானம் ஆகும். ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலினை அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். போராட்ட உரிமையை மீறும் இதுபோன்ற நடவடிக்கைகளை அரசு முற்றிலுமாகக் கைவிட வேண்டும்.
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது அமர்வு ஓகஸ்ட் 3ஆம் திகதி புதன்கிழமை காலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், அரசின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைத்து உரையாற்றும்போதே, அமைதிப் போராட்டம் மனிதனின் அடிப்படை உரிமை என்றும், அந்த உரிமையை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் ஜனாதிபதி உறுதியளித்தார்.
அமைதியான போராளிகளுக்கு எந்தவிதமான பாரபட்சத்தையும் நான் அனுமதிக்கமாட்டேன் எனவும், அமைதியான போராளிகளைப் பாதுகாக்கவும் வாதிடவும் ஒரு விசேட அலுவலகத்தை நிறுவுவேன் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்திருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைப் பதவி நீக்கம் செய்வதற்கான அரச எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னோடியாக இருந்தவர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் என்பது குறிப்பிடத்தக்கது” – என்றுள்ளது.