உயிர்பலி வாங்கும் ஆன்லைன் சூதாட்டம்.. தடைச்சட்டம் இயற்ற தமிழக அரசு தயங்குவது ஏன்? – சீமான் கேள்வி
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளால் கடந்த 15 மாதங்களில் இதுவரை 28 இளைஞர்கள் பலியானதாக சுட்டிக்காட்டியுள்ள, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இணையவழி சூதாட்ட விளையாட்டுகளை முற்றாகத் தடைசெய்ய உடனடியாக வலுவான சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்ற வேண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக சீமான் விடுத்துள்ள அறிக்கையில், நாமக்கல் மாவட்டம், இராசிபுரத்தைச் சேர்ந்த இளைஞர் சுரேஷ் இணையவழி சூதாட்டத்திற்கு அடிமையாகி, இலட்சக்கணக்கில் பணத்தை இழந்த விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். தற்கொலைக்குமுன் தம்பி எழுதிய உருக்கமான கடிதம் நெஞ்சை உலுக்கிவிட்டது. தொடர்ந்து உயிர்பலிகள் நிகழ்ந்து கொண்டிருக்கும் நிலையிலும் இணையவழி சூதாட்டங்களைத் தடை செய்யாமல் காலங்கடத்தி வரும் திமுக அரசின் மெத்தனப்போக்கு வன்மையான கண்டனத்திற்கு உரியது.
குறுக்குவழியில் அதிகப் பணம் ஈட்டுவதற்கான ஆசையைத் தூண்டி இளைஞர்களை மாய வலையில் விழவைக்கும் இணையவழிச் சூதாட்ட செயலிகள், தமிழ்ச் சமூகத்திற்கு மட்டுமின்றி நாடு முழுவதுமுள்ள இளைய தலைமுறையினரின் எதிர்காலத்திற்குப் பேராபத்தாக மாறி நிற்கிறது. இணையவழி சூதாட்டங்களால் பொருள் இழப்பு, நேர இழப்பு மட்டுமின்றித் தன்னம்பிக்கை உள்ளிட்ட அடிப்படை மனித நற்பண்புகளை அழித்து, இளம் வயதிலேயே தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு மன அழுத்தத்திற்கு ஆளாக்கி, அவர்களின் வாழ்வினையே பாழ்படுத்துகிறது என்பதே வலிமிகுந்த உண்மையாகும்.
நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், சமூகநல ஆர்வலர்களும் வைத்த தொடர் கோரிக்கையை ஏற்று, இணையவழி சூதாட்டங்களுக்குத் தடைவிதிக்க, கடந்த அதிமுக ஆட்சியின்போது அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்பின், நீதிமன்றம் மூலம் தடை நீக்கம் பெற்றபோதிலும், அடுத்த ஆறு மாதத்திற்குள் வலுவான சட்டம் இயற்றி, முறையாகத் தடைசெய்யுமாறு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி ஓராண்டு கடந்தும் இதுவரை தமிழ்நாடு அரசு தடைச்சட்டம் இயற்ற மறுப்பது ஏன்?
இணையவழிச் சூதாட்டங்களைத் தடைச்செய்வது குறித்து ஆராய, தமிழ்நாடு அரசால் நீதியரசர் சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட ஆய்வுக்குழுவானது, புதிய தடைச்சட்டம் இயற்ற வேண்டுமெனப் பரிந்துரைத்து இரண்டு மாதங்களாகியும் இதுவரை தமிழ்நாடு அரசு அமைதி காப்பது ஏன்?
தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் விலைமதிப்பற்ற தமிழ் இளம் தலைமுறையினரின் உயிர்கள் பறிபோய்க்கொண்டிருக்கச் சிறிதும் ஈவு இரக்கமின்றி இன்றளவும் இணையவழி சூதாட்டங்களைத் தடை செய்ய மறுத்து வருவது திமுக அரசின் மீது மிகப்பெரிய ஐயத்தை ஏற்படுத்துகிறது. ஆட்சிக்கு வந்தவுடன் இணையவழி சூதாட்ட விளையாட்டுகளை நிரந்தரமாகத் தடைசெய்வோம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்த திமுக, யாருடைய தூண்டுதலால் இன்றுவரை தடைசெய்ய மறுத்து ஏமாற்றி வருகிறது? என்ற கேள்வியும் எழுகிறது.
கடந்த ஜூன் மாதம் மணலியைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளுக்குத் தாயான தங்கை பவானி, தற்போது இராசிபுரத்தை தம்பி சுரேஷ் என திமுக ஆட்சிக்கு வந்த கடந்த 15 மாதங்களில் இதுவரை 28 இளைஞர்கள் பலியான கொடுமைகள் அரங்கேறிய பிறகும் திமுக அரசு தொடர்ந்து அமைதி காப்பது சிறிதும் மனச்சான்றற்ற கொடுங்கோன்மையாகும். இணையவழி சூதாட்டங்களைத் தடைசெய்யாமல் இன்னும் எத்தனை உயிர்களைக் காவுவாங்க திமுக அரசு காத்திருக்கின்றது? தாயை இழந்து, தந்தையை இழந்து இன்னும் எத்தனை, எத்தனை குழந்தைகள் பரிதவிக்கக் காரணமாகப்போகின்றது? பெற்று வளர்த்து ஆளாக்கிய பிள்ளைகளைப் பறிகொடுத்து தள்ளாத வயதில் இன்னும் எத்தனை பெற்றோர்களை திமுக அரசு தவிக்கவிடப்போகிறது?
எனவே, மக்களின் நலத்தில் சிறிதேனும் அக்கறை இருக்குமாயின், இளைஞர்களை உயிர்பலி எடுக்கும் இணையவழி சூதாட்ட விளையாட்டுகளை முற்றாகத் தடைசெய்ய உடனடியாக வலுவான சட்டம் இயற்ற வேண்டுமென்று தமிழ்நாடு அரசினை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.