செஸ் ஒலிம்பியாட் : தன்னம்பிக்கையுடன் காய்நகர்த்தும் பார்வை குறைபாடுள்ள நடாஷா..
மாமல்லபுரத்தில் கொண்டாடப்பட்டு வரும் செஸ் ஒலிம்பியாட் தொடரில் பார்வை குறைபாடு உடைய வீராங்கனை ஒருவர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார். செஸ் போர்டை துல்லியமாக பார்க்க முடியாத நிலையிலும் தன்னம்பிக்கையின் உருவகமாக திகழும் அவரை பற்றி இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.
44-வது செஸ் ஒலிம்பியாட் தொடரில் நுட்பமாக காய் நகர்த்தி வரும் வீரர், வீராங்னைகளுக்கு இடையே பார்வைத்திறன் குறையுடன், காய் நகர்த்தி வருகிறார் மோரல்ஸ் சேன்டோஸ் நடாஷா (Morales Santos Natasha).. போர்டோரிகா நாட்டை சேர்த்த இவர், அந்நாட்டு மகளிர் அணியின் முதன்மை வீராங்கைனையாக உலா வருகிறார். நடாஷாவுக்கு ஒரு கண்ணில் பார்வைத்திறன் குறைபாடு, மற்றொரு கண்ணில் பாதி பார்வை மட்டுமே உள்ளது.
24 வயதான நடாஷா, 1,924 ஃபிடே ரேட்டிங் புள்ளிகளுடன் போர்டோரிகா நாட்டின் தலைசிறந்த வீராங்கனையாக விளங்குகிறார். இவரின் அணியின் மற்ற நான்கு வீராங்கனைகளை விட நடாஷாவின் ரேட்டிங் புள்ளிகளே அதிகம். சர்வதேச மகளிர் செஸ் மாஸ்டரான இவர், தேசிய அணியின் நட்சத்திர வீராங்கனையாகவும், நம்பிக்கை நாயகியாவும் திகழ்கிறார்.
ஐந்து அடி தூரத்துக்குள் இருக்கும் பொருட்களை மட்டுமே பார்க்க முடிந்த நடாஷாவால், 10 நிமிடத்திற்கு மேல் தொடர்ந்து ஒரு பொருளை உற்று நோக்குவது மிகவும் கடினம். ஆனால், மணிக்கணக்கில் ஒரே இடத்தில் அமர்ந்து, செஸ் போர்டை மட்டுமே கூர்ந்து கவனித்து, காய்களை நகர்த்துவதற்கான வியூகத்தை நடாஷாவால் எப்படி வகுக்க முடிகிறது? இதுவே, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.
ஒலிம்பியாட் போட்டியில் தனக்கென தனி செஸ் போர்டுடன் அமர்ந்து போட்டிக்கு தயாராகும் நடாஷா வழக்கமான போர்டில் ஆட முடியாது என்பதால் அவர் சொல்லச் சொல்ல தமிழகத்தை சேர்ந்த செஸ் வீரரான மாரிமுத்து காய்களை நகர்த்தி உதவுகிறார்.
இதுவரை நடந்து முடிந்த 6 சுற்றுகளின் முடிவில், நடாஷா ஒரு போட்டியில் வெற்றிபெற்றார். இரண்டு போட்டிகளில் டிராவும், மூன்று போட்டிகளில் தோல்வியையும் சந்திந்தார். போர்டோரிகா அணி, 110-வது இடத்தில் உள்ள போதும், நடாஷாவின் ஆட்டத்தை அனைவரும் வியப்புடன் கவனிக்கின்றனர், 3-வது முறையாக செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்றுள்ள நடாஷாவிற்கு, தமிழகத்தின் உபசரிப்பு மெய்சிலிர்க்க வைப்பதாக கூறுகிறார்
வாழ்க்கையில் அனைத்து வசதிகள் இருந்தும் போராடாமல், தோல்விக்கு காரணத்தை தேடி அழையும் நபர்களுக்கு மத்தியில், பார்வைத்திறன் குறைபாடு உள்ள நடாஷா உதிர்க்கும் வார்த்தை, அனைவரிடத்திலும் நம்பிக்கையை விதைக்கும் வகையில் அமைந்துள்ளது..