என்.எல்.சி வேலைகளில் நிலம் கொடுத்த உள்ளூர் குடும்பத்தினருக்கு முன்னுரிமை: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
தமிழ்நாட்டில் உள்ள மந்திய அரசின் நவரத்னா பொதுத்துறை நிறுவனமான என் எல்.சியின் திட்டங்கள் மற்றும் சுரங்கங்களுக்கு நிலம் வழங்கிய குடும்பங்களை சேர்ந்த உள்ளூர் விண்ணப்பதாரர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.
இதே கோரிக்கையை முன்வைத்து கடந்த மே 5 ம் தேதி பிரதமருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம் மூலம் வலியுறுத்தி இருந்தார். அதில், என்எல்சி திட்டங்கள் மற்றும் சுரங்கங்களுக்கு நிலம் வழங்கிய குடும்பங்களை சேர்ந்த உள்ளூர் விண்ணப்பதாரர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கும் சிறப்புத் தேர்வின் மூலம் பட்டதாரி பொறியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும் எனவும், கேட் (GATE) தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பயிற்சி பட்டதாரி பொறியாளர்களை நியமிக்கக்கூடாது எனவும் உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இதற்கிடையே, கேட் (GATE) தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தகுதி மதிப்பெண் அடிப்படையில் தயாரிக்கப்பட்டு கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி ஆள் சேர்க்கைக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற் தகுதி தேர்வை என் எல்.சி நடத்தியது. இதில், 299 பேர் கலந்து கொண்டனர். இதில், நிறுவனத்துக்கு நிலம் வழங்கிய உள்ளூர் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பெருமளவு புறக்கணிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையொட்டி, தமிழ்நாட்டிலுள்ள என்எல்சி திட்டங்களுக்கு நிலம் வழங்கிய குடும்பங்களை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சி பட்டதாரி பொறியாளர் தேர்வில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், ” பட்டதாரி பொறியாளர் தேர்வில் நிலம் வழங்கிய குடும்பங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று 2022 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தேன்.
இருப்பினும், கேட் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி தகுதி மதிப்பெண் பட்டியலை என்எல்சி நிறுவனம் தயாரித்தது. இதில், நிறுவனத்துக்கு நிலம் வழங்கிய உள்ளூர் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பெருமளவு தேர்வாகவில்லை. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக நிரந்தர பணி வாய்ப்பை என்.எல்.சி. நிறுவனம் மறுத்து வரும் வேளையில், தற்போது இந்த முடிவு நியாயமற்றதாக உள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சி பட்டதாரி பொறியாளர் பணிக்கு தேர்வு செய்வதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையில் அழுத்தமான நியாயம் இருக்கிறது. இந்த விஷயத்தில் பிரதமர் தலையிட்டு விரைவில் சாதகமானதாக முடிவு எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.