பெற்ற தாயே மாற்றுத்திறனாளி குழந்தையை 4வது மாடியில் இருந்து வீசி கொலை செய்த கொடூரம்.. பெங்களுரூவில் அதிர்ச்சி சம்பவம்..
மாற்றுத்திறனாளி குழந்தையை 4வது மாடியில் இருந்து தூக்கி எறிந்து பெற்ற தாயே கொலை செய்த சம்பவம் கர்நாடகாவில் அரங்கேறியுள்ளது. கர்நாடகா மாநில தலைநகரான பெங்களூருவில் எஸ்ஆர் நகர் பகுதியில் கிரண் மற்றும் சுஷ்மா என்ற தம்பதி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர். கணவர் கிரண் மென்பொருள் பொறியாளராகவும், மனைவி சுஷ்மா பல் மருத்துவராகவும் உள்ளனர். இவர்களுக்கு நான்கு வயது பெண் குழந்தை ஒன்று உள்ளது.
இந்த குழந்தை பிறந்த போதே மாற்று திறனாளியாக இருந்துள்ளது. வாய் பேச முடியாமலும், மூளை வளர்ச்சி குறைவாகவும் இருந்த அந்த பெண் குழந்தையின் நிலையை பார்த்து அவரது தாயார் சுஷ்மாவுக்கு கடும் மன அழுத்தம் தந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மாலை வேளையில் தாயார் சுஷ்மா அவர் வசிக்கும் வீட்டின் நான்காவது மாடி பால்கனியில் தனது குழந்தையை கையில் தூக்கி வைத்து நின்றுள்ளார். திடீரென்று அந்த குழந்தையை நான்காவது மாடியில் இருந்து கீழே தூக்கி வீசியுள்ளார். இதில் அந்த குழந்தை சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
அடுத்த சில நிமிடங்களில் சுஷ்மாவும் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதற்குள் அருகே இருந்த வீட்டினர் மற்றும் அவரின் கணவர் அங்கு விரைந்து வந்து சுஷ்மாவை தடுத்துள்ளனர். உடனடியாக பெண்ணின் கணவர் காவல்துறைக்கு அளித்த புகாரின் பேரில் தாய் சுஷ்மா கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொடூர சம்பவத்தின் அனைத்து காட்சிகளும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
ஏற்கனவே, தன் குழந்தை மீதான வெறுப்பில் இருந்த சுஷ்மா தனது குழந்தையை ஒரு நாள் ரயில்வே ஸ்டேஷனில் அப்படியே விட்டுவிட்டு வந்துள்ளார். பின்னர் கணவர் கிரணுக்கு இது தெரிய வரவும் உடனடியாக ரயில்வே நிலையம் சென்று குழந்தையை மீட்டு வந்துள்ளார். இந்த அழுத்தமான மனநிலையில் தான் பெற்ற குழந்தையை தாயார் தூக்கி வீசி கொலை செய்துள்ளார்.